செய்திகள்
காரில் சிக்கிய பணத்துடன் லஞ்ச ஒழிப்பு போலீசார்

வட்டார போக்குவரத்து ஆய்வாளர் காரை வழிமறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

Published On 2020-11-21 03:08 GMT   |   Update On 2020-11-21 03:08 GMT
நாகர்கோவிலில் வட்டார போக்குவரத்து ஆய்வாளரின் காரை வழிமறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கட்டு, கட்டாக பணம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 46). இவர் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுதொடர்பாக ரகசியமாக விசாரணை நடத்தி, கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வாகன ஆய்வாளர் பெருமாள் தனது காரில் நெல்லைக்கு புறப்பட்டார். அவர் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் வந்தபோது, அங்கு மறைந்திருந்த குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், காரை தடுத்து நிறுத்தினர். திடீரென சிலர் காரை வழிமறித்ததும் பெருமாள் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரிடம் அவர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் என அறிமுகப்படுத்தி கொண்டனர். தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் காரில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது காரில் கட்டு கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பெருமாளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பணத்திற்கான ஆவணங்கள் குறித்து கேட்டனர். அவரிடம் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. முன்னுக்கு பின் முரணாக பேசியதாக தெரிகிறது.

மேலும் காரில் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக பெருமாள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், காரில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், மோட்டார் வாகனங்களுக்கு சான்றிதழ் அளிக்க லஞ்சமாக கொடுத்திருக்கலாம். இந்த விவகாரத்தில் ஒரு புரோக்கர் உள்பட 2 பேருக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரை பெருமாளிடம் விசாரணை நடத்தப்பட்டது என்றனர். மேலும், அவருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதிகாரி காரில் கட்டு, கட்டாக கணக்கில் வராத பணம் சிக்கிய சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News