செய்திகள்
கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி பேசியபோது எடுத்தபடம்.

பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்- கலெக்டர் பேச்சு

Published On 2020-09-15 06:18 GMT   |   Update On 2020-09-15 06:18 GMT
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.
கோவை:

ஊட்டச்சத்து மாதம் (போஜன் அபியான்) திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் மூலம் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:-

ஊட்டசத்து நிறைந்த குழந்தைகளை உருவாக்குவது, சமுதாய வீட்டுத் தோட்டம் அமைப்பதன் முக்கியத்துவம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த செயலாக்க திட்டங்களை வீடுகள் தோறும் கொண்டு சேர்த்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போஜன் மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு குழந்தையின் சுகவீனத்துக்கு சத்து இன்மை மட்டுமே காரணமல்ல. அத்துடன் தொடர்புடைய, குழந்தை முதிரா நிலை, குறைவான எடையில் பிறத்தல், நிமோனியா உள்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. போஜன் மா திட்டம் எனப்படும் தேசிய ஊட்டச்சத்து திட்டமானது இதுபோன்ற குறைபாடுகள் குறித்து கிராமப்புறங்களில் ஏழ்மை நிலையில் வாழும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கருவியாக செயல்பட்டு வருகிறது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த மாதத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் முடிந்ததும் திட உணவை அறிமுகப்படுத்துதல், கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பிறகும், பெண்கள் முறையான ஊட்டச்சத்து உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையின் திட்ட அலுவலர் மீனாட்சி, துணை இயக்குனர் கிருஷ்ணா, மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பிரபாகரன், உதவி இயக்குனர் துவாரகநாத்சிங் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News