ஆன்மிகம்
சிவாலய ஓட்டம்( பழைய படம்)

மன வாட்டம் போக்கும் சிவாலய ஓட்டம்

Published On 2021-03-11 04:13 GMT   |   Update On 2021-03-11 04:13 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று காலை முதல் சிவராத்திரி இரவு மற்றும் மறுநாள் அதிகாலை வரை ஓடிச்சென்று வழிபடுவதே ‘சிவாலய ஓட்டம்’ ஆகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள ‘சிவாலய ஓட்டம்’ மிகவும் பிரசித்திப்பெற்றது. அங்குள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று காலை முதல் சிவராத்திரி இரவு மற்றும் மறுநாள் அதிகாலை வரை ஓடிச்சென்று வழிபடுவதே ‘சிவாலய ஓட்டம்’ ஆகும். இந்த ஓட்டமானது சுமார் 118 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியது. சிவராத்திரி அன்று காலையில் காவி வேட்டியும், காவித்துண்டும் தரித்து, ருத்திராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு, பனை ஓலை விசிறியுடன் சிவாலய ஓட்டத்தை அடியவர்கள் தொடங்குவார்கள்.

முஞ்சிறை திருமலை சூலபாணி மகாதேவர் திருக்கோவிலில் தொடங்கும் இந்த ஓட்டமானது, திக்குறிச்சி மகாதேவர் திருக்கோவில், திற்பரப்பு மகாதேவர் திருக்கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் திருக்கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் திருக்கோவில், திருபன்னிபாகம் சிவன் திருக்கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி திருக்கோவில், மேலாங்கோடு சிவன் திருக்கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் திருக்கோவில், திருவிதாங்கோடு சிவன் திருக்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் திருக்கோவில்களைக் கடந்து, திருநட்டாலம் சங்கர நாராயணர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் முடிவடையும்.

பாண்டவர்களில் ஒருவரான தருமர், ஒருமுறை ராஜகுரு யாகம் ஒன்றை நிறைவேற்ற புருஷா மிருகத்தின் (வியாக்ரபாதர்) பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு. வியாக்ரபாத மகரிஷிக்கு சிவனும், விஷ்ணுவும் ஒன்று என உணர்த்த நினைத்த கண்ணபிரான், பீமனிடம் புருஷா மிருகத்தின் பால் கொண்டு வர கட்டளையிட்டார். கூடவே 12 ருத்திராட்சங்களை பீமனின் கையில் கொடுத்து, “உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் இதில் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டுவிட்டு `கோபாலா கோவிந்தா' எனச்சொல்” என்று கூறி அனுப்பி வைத்தார்.

பீமன், புருஷாமிருகத்தை தேடி கானகம் வந்தான். அன்று மகா சிவராத்திரி நன்னாள். அங்கே புருஷாமிருகம் சிவபூஜையில் இருந்தது. பீமன், அதன் அருகேச் சென்று “கோபாலா.. கோவிந்தா” என்று கூறி சிவபூஜைக்கு இடையூறு செய்தான். பீமனின் நாம உச்சரிப்பைக் கேட்டு, புருஷா மிருகம் கோபம் அடைந்து பீமனை விரட்டியது. உடனே பீமன் ஒரு ருத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான். ருத்ராட்சத்தில் இருந்து ஒரு சிவலிங்கம் தோன்றியது. சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷா மிருகம், சிவபூஜை செய்யத் தொடங்கியது.

சிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும் “கோவிந்தா, கோபாலா” என்ற நாமத்தை உச்சரித்தான். மீண்டும் கோபம் கொண்ட புருஷாமிருகம் அவனை துரத்தியது. சிறிது தூரம் ஓடிய பீமன், ஓரிடத்தில் மற்றொரு ருத்ராட்சத்தைப் போட்டான். அங்கும் ஒரு சிவலிங்கம் தோன்றியது. அதைப் பார்த்ததும் புருஷா மிருகம் கோபம் தணிந்து மீண்டும் சிவ பூஜையில் ஆழ்ந்தது. இப்படியே பீமனுக்கும், புருஷா மிருகத்துக்கும் இடையே நடைபெற்ற ஓட்டத்தில் 12 சிவலிங்கங்கள், 12 இடங்களில் தோன்றின. 12-வது சிவலிங்கம் தோன்றிய இடமான திருநட்டாலத்தில் சிவபெருமானும், கண்ணனும் சேர்ந்து, ‘சங்கரநாராயணராக, புருஷாமிருகத்துக்கு காட்சி கொடுத்தனர்.

இதையடுத்து சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்பதை உணர்ந்த புருஷா மிருகம், மகிழ்ச்சி அடைந்து, பீமனுக்கு தன்னுடைய பாலை கொடுத்தது. இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில்தான், இன்றளவும் மகா சிவராத்திரி அன்று சிவாலய ஓட்டம் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
Tags:    

Similar News