செய்திகள்
அமைதி ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்

சப்-இன்ஸ்பெக்டர் கொலைக்கு கண்டனம் - இந்து அமைப்பினர் மவுன ஊர்வலம்

Published On 2020-01-11 13:51 GMT   |   Update On 2020-01-11 13:51 GMT
நாகர்கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்து அமைப்பினர் மவுன ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:

களியக்காவிளை சோதனை சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து படந்தாலுமூட்டில் இருந்து களியக்காவிளை வரை மவுன ஊர்வலம் நடத்தப்படும் என்றும், களியக்காவிளையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் இந்து அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை படந்தாலு மூடு டெப்போ அருகில் தொடங்கிய மவுன ஊர்வலத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். மாவட்ட நிர்வாகி ராஜேந்திரன், பா.ஜ. மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இந்து முன்னணி மாநில நிர்வாகிகள் அரசு ராஜா, குழிச்சல் செல்லன், விஸ்வ இந்து பரி‌ஷத் நிர்வாகி காளியப்பன், பா.ஜ. மாநில துணை தலைவர் எம்.ஆர். காந்தி, கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ், களியக்காவிளை மண்டல தலைவர் சரவணவாஸ் நாராயணன் உள்பட 500-க்கும் மேற்பட்ட பா.ஜ. மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த மவுன ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

படந்தாலுமூட்டில் இருந்து ஆலுமூடு, ஒற்றாமரம், பி.பி.எம். சந்திப்பு வழியாக ஊர்வலம் களியக்காவிளை சந்திப்பை அடைந்தது. போக்குவரத்துக்கு இடையூறு இன்றி சாலை ஓரமாக ஊர்வலமாக சென்றனர். முடிவில் களியக்காவிளையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து இயக்க நிர்வாகிகள் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் குமரி மாவட்டத்தில் முதன் முதலாக நடந்த இதுபோன்ற பயங்கரவாத செயலை தடுக்க தவறிய அதிகாரிகளை கண்டித்தும், இந்த கொலையை இரக்கமின்றி செய்த பயங்கரவாத அமைப்புகளை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை கைது செய்ய வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா சார்பில் தக்கலையில் தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில இளைஞரணி தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரவி பேசினார். மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது எஸ்.ஐ. வில்சனை கொலை செய்த பயங்கரவாதிகளை கைது செய்ய வேண்டும். கொலை வழக்கில் நீதி வழங்க வேண்டும். வில்சனை குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோ‌ஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News