வழிபாடு
5 தேர்கள் வீதி உலா வந்தபோது எடுத்தபடம்.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம்

Published On 2022-02-16 03:59 GMT   |   Update On 2022-02-16 03:59 GMT
மாசிமக விழாவை முன்னிட்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தையொட்டி மாசிமக திருவிழாவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்றைய தினம் இரவு சாமி - அம்பாள் தனித்தனி இந்திர விமானத்தில் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து 11-ந் தேதி 63 நாயன்மார்களின் வீதி உலாவும், 12-ந் தேதி ஓலைச்சப்பரமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீதி உலா வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம்பிடித்து இழுத்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) காலை 12 மணிக்கு மகாமக குளத்தில் நடைபெற உள்ளது. இதே போல் மாசி மக விழா தொடர்புடைய காசிவிஸ்வநாதர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில், கவுதமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் இன்று (புதன்கிழமை) மாலை மகாமக குளக்கரையிலும், வியாழசோமேஸ்வரர் கோவிலில் தேரோடும் வீதியிலும் தேரோட்டம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து நாளை காலை மாசிமகம் தொடர்புடைய 12 சிவன் கோவில்களில் இருந்து சாமி புறப்பாடு நடைபெற்று மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் ஒரே நேரத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News