செய்திகள்
ராகுல் காந்தி

விவாதித்தது போதும்... தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக செலுத்துங்கள் -ராகுல் காந்தி வலியுறுத்தல்

Published On 2021-04-26 10:05 GMT   |   Update On 2021-04-26 10:08 GMT
பாஜகவின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலிகடா ஆக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து தனது கோரப்பிடியை இறுக்கி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருந்துப்பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மே 1-ந் தேதி தொடங்குகிறது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி, அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.

இந்நிலையில், மத்திய அரசின் நிர்வாகத் திறன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாஜகவின் செயல்பாடுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். 



ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 

விவாதித்தது போதும். நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். பாஜகவின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலிகடா ஆக்காதீர்கள். இவ்வாறு ராகுல் கூறி உள்ளார்.

மே 1ம் தேதி முதல் 3 விதமான விலைகளில் தடுப்பூசிகள் கிடைக்கும். சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்டு தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு ரூ.400 விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 விலையிலும் வழங்குவதாக அறிவித்தது. பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவேக்சின் தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு ரூ.600 விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 விலையிலும் வழங்குவதாக அறிவித்தது. ஆனால், இரண்டு நிறுவனங்களும்  மத்திய அரசுக்கு ரூ.150 என்ற விலையில் கொடுக்கின்றன.

ஒரே தடுப்பூசி வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.

தமிழகம், கேரளா போன்ற சில மாநிலங்கள் மக்களுக்கு தொடர்ந்து இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளன.
Tags:    

Similar News