செய்திகள்
ஊட்டி மலை ரெயில் (கோப்புப்படம்)

ஊட்டி மலை ரெயில் சேவை 29-ந்தேதி வரை ரத்து

Published On 2019-11-24 06:42 GMT   |   Update On 2019-11-24 06:42 GMT
ஊட்டி மலை ரெயில் சேவை வருகிற 29-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மேட்டுப்பாளையம்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழை காரணமாக கடந்த 17-ந் தேதி ஊட்டி மலை ரெயில் பாதையில் பாறை சரிந்து விழுந்தது. தண்டவாளத்தில் மண் சரிவும் ஏற்பட்டது.

இதனால் மேட்டுப்பாளையம் -குன்னூர் இடையேயான மலை ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ஒரு சில இடங்களில் தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை முழுமையாக அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே அந்த பாறைகளை வெடி வைத்து அகற்ற ரெயில்வே துறையினர் முடிவு செய்தனர். அதன்படி ராட்சத பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு பின்னர் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனாலும் குன்னூரிலிருந்து ஹில்குரோவ் வரை தண்டவாளத்தில் விழுந்த பாறை, கற்களை முழுமையாக அகற்ற முடியவில்லை.

இதனால் மலை ரெயிலை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே வருகிற 29-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இதனால் மலை ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News