உள்ளூர் செய்திகள்
ரேஷன் அரிசி

காஞ்சிபுரம் அருகே 22 டன் ரேஷன் அரிசி சிக்கியது

Published On 2021-12-30 10:48 GMT   |   Update On 2021-12-30 10:50 GMT
காஞ்சிபுரம் அருகே 22 டன் ரேஷன் அரிசி சிக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த சிறுகாவேரிபாக்கம் சுப்புரத்தினம் நகர் பகுதியில் லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது 2 மினி லாரிகளில் இருந்து ஒரு சரக்கு லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டிருப்பதை பார்வையிட்டார்.

அதிகாரி வருவதை கண்டதும் டிரைவர்கள் அங்கிருந்து மினிலாரியில் தப்பிச்சென்று வி்ட்டனர்.

அங்கு நின்றுகொண்டிருந்த லாரியை சோதனையிட்டதில் ரேஷன் அரிசி என்பதும் வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து 2 லாரிகளை பறிமுதல் செய்த குடிமை பொருள் குற்ற புலனாய்வு போலீசார் தப்பிச்சென்ற லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சீதனம்சேரி அருகே சாலவாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 50 கிலோ அரிசி மூட்டைகள் 50 இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் இருந்த 2 பேரிடம் இது குறித்து விசாரித்தபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. மூட்டைகளை பிரித்து சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.

மினி லாரியில் இருந்தவர்கள் காஞ்சீபுரம் வணிகர் தெருவை சேர்ந்த முஜாகிம் (வயது28), வடிவேல் (29) என்பது தெரியவந்தது அவர்களை கைது செய்த போலீசார் லாரியையும் அரிசி மூட்டையையும் குடிமையியல் குற்றப்புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News