ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 17-ந்தேதி நடை திறப்பு

Published On 2018-10-04 02:43 GMT   |   Update On 2018-10-04 02:43 GMT
ஐப்பசி மாத பூஜைக்காக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை வருகிற 17-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. #Sabarimala #SaveSabarimala
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டும் அல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், வி‌ஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர விழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து ஐயப்பனை வழிபட்டு செல்வார்கள்.

இந்த நிலையில் நடப்பு ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிரு‌ஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை நடத்துவார்.

18-ந் தேதி முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உ‌ஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, பு‌ஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 22-ந் தேதி வரை தந்திரி ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

முன்னதாக 18-ந் தேதி காலையில் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி உண்ணிகிரு‌ஷ்ணன் நம்பூதிரி முன்னிலையில், 2018-2019-ம் ஆண்டுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவில், மாளிகப்புரம் கோவில் ஆகியவற்றிற்கு ஏற்கனவே நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் நடப்பாண்டின் மண்டல சீசன் (நவம்பர் 16-ந் தேதி முதல்) அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை ஓராண்டு காலத்திற்கு மேல்சாந்திகளாக பணியாற்றுவார்கள். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுடன், 22-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள அரசின் சிறப்பு பஸ்கள் சபரிமலைக்கு இயக்கப்படும்.

நடப்பாண்டின் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி திறக்கப்படும்.
Tags:    

Similar News