செய்திகள்
கோப்புப்படம்

கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடியது- வியாபாரிகள் கவலை

Published On 2021-05-15 05:53 GMT   |   Update On 2021-05-15 14:06 GMT
புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்று முதல் காலை 10 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு முதன்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

போரூர்:

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி இயங்கி வருகிறது. நேற்று வரை பகல் 12 மணி வரை காய்கறி, பழம், பூ, மளிகை கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக காலை 10 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு முதன்மை அதிகாரி கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

வியாபாரிகள் வாகனங்களை தவிர்த்து கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் மார்கெட் வளாகத்திற்குள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று காய்கறி சந்தைக்கு 350 லாரிகளில் காய்கறி விற்பனைக்கு வந்துள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் வரத்து அதிகரித்து காய்கறி விற்பனை விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

ஆனால் நள்ளிரவில் சற்று பரபரப்பாக காணப்பட்ட மார்க்கெட் வளாகம் அதிகாலை 5 மணிக்கு மேல் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது.

நள்ளிரவில் ரூ.70-க்கு விற்ற ஒரு பெட்டி (14கிலோ) தக்காளி பின்னர் ரூ.50-க்கும், முட்டை கோஸ் 90 கிலோ மூட்டை ரூ.100-க்கும், கத்தரிக்காய் 50 கிலோ மூட்டை ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதையும் வாங்கி செல்ல சில்லரை வியாபாரிகள் யாரும் வரவில்லை.


கேரட், பீன்ஸ், அவரைக் காய் தவிர வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், வெண்டைக்காய், கோவக்காய், பாகற்காய், காலி பிளவர், முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் மூட்டை மூட்டையாக தேக்கமடைந்துள்ளது. இது வியாபாரிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.

இன்றைய காய்கறி மொத்த விலை விபரம் வருமாறு:-

தக்காளி- ரூ.5

வெங்காயம்-ரூ.15

சின்ன வெங்காயம்-ரூ.50

உருளைக்கிழங்கு-ரூ.16

உஜாலா கத்திரிக்காய்-ரூ.12

வரி கத்திரிக்காய்- ரூ.8

வெண்டைக்காய்-ரூ.6

அவரைக்காய்-ரூ.20

கோவக்காய்-ரூ.6

பாகற்காய்-ரூ.8

ஊட்டி கேரட்-ரூ.20

கேரட்-ரூ.10

பீன்ஸ்-ரூ.40

பீட்ரூட்-ரூ.12

முட்டை கோஸ்-ரூ.4

வெள்ளரிக்காய்-ரூ.7

புடலங்காய்-ரூ.8

பூசணிக்காய்-ரூ.7

காலி பிளவர் ஒன்று-ரூ.6

பச்சை மிளகாய்-ரூ.10.

Tags:    

Similar News