ஆன்மிகம்
காரமடை அரங்கநாதர் கோவிலில் வாசலில் நின்று தரிசனம் செய்த பக்தர்கள்.

புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் வாசலில் நின்று தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2021-09-18 04:55 GMT   |   Update On 2021-09-18 04:55 GMT
புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் இன்று காலை முதலே காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அரங்கநாதர் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு விரதம் இருப்பதற்கு ஏற்ற நாளாகவும் கூறப்படுகிறது.

அதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெரும்பாலானோர் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கம். இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பெருமாள் சிறந்த வரங்களைத் தந்து அந்த ஆண்டு முழுவதும் துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார் என்பதும், ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லைகள் நீங்கும் என்பதும் ஐதீகம்.

இந்த மாதத்தின் முதல் சனிக்கிழமை இன்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடந்தது.

காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் வரும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். விரதமிருந்து வந்து அரங்கநாதரை வழிபட்டு செல்வார்கள்.

இன்று காலை 6 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் அதிகளவில் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதால் கோவில் முன்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் இன்று காலை முதலே காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அரங்கநாதர் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

அவர்களை போலீசார் கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் கோவில் வாசல் முன்பு நின்று பெருமாளை தரிசித்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் தாங்கள் கொண்டு வந்த அரிசி, பருப்பு, உப்பு போன்றவற்றை அங்கிருந்த தாசர்களிடம் வழங்கி ஆசி பெற்றனர்.

பக்தர்கள் தரிசனத்திற்கு தடை என்பதால் கோவில் முன்பு இருந்த ஏராளமான கடைகளும் மூடப்பட்டிருந்தன.

பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் நடை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேங்களும், பூஜைகளும் நடந்தது.

இங்கும் அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் ஊழியர்கள், கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் பக்தர்கள் வாசலில் நின்று கோவிந்தா, கோவிந்தா கோ‌ஷம் எழுப்பி பெருமாளை தரிசித்து சென்றனர்.

பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து மதியம் 12 மணி மற்றும் இரவு 7 மணிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இங்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.

இதேபோல் ராமர் கோவில், உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில், சிட்கோ கணேசபுரத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் பக்தர்களின்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News