செய்திகள்
செங்காளம்மாள்

தொழிற்சாலை எந்திர வாகனம் மோதல்- பெண் தொழிலாளி பலி

Published On 2020-09-17 02:26 GMT   |   Update On 2020-09-17 02:26 GMT
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை தொழிற்சாலையில் எந்திர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் துப்புரவு தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பழைய வயர்களில் இருந்து தாமிரகம்பிகளை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு பாத்தபாளையம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா என்பவரது மனைவி செங்காளம்மாள் (வயது 65) என்பவர் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று அவர் வேலையில் இருந்தபோது, தொழிற்சாலையில் பளுவான பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தூக்கி செல்லும் எந்திர வாகனம் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த செங்காளம்மாள் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து உயிரிழந்த பெண் துப்புரவு தொழிலாளி குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட கோரி அந்த தொழிற்சாலை வளாகத்தை அக்கிராம பொதுமக்கள் சிலர் நேற்று இரவு முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தொழிற்சாலை நிர்வாகத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News