செய்திகள்
முருகன்

தோழியின் ஆசைவார்த்தையால் மோசடி வழக்கில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர்

Published On 2021-10-09 11:21 GMT   |   Update On 2021-10-09 11:21 GMT
தோழியின் நட்பினாலும், அவர் கூறிய ஆசை வார்த்தை நம்பியும் சென்னைக்கு சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்போது காசோலை மோசடி வழக்கில் சிக்கியுள்ளார்.

கோவை:

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் 2 பெண்கள் உள்பட 4 பேர் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய காசோலையை மாற்றுவதற்கு கொண்டு வந்தனர்.

அவர்கள் கொடுத்த காசோலையிலும், அவர்கள் மீதும் சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர், டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தை ஆன்லைன் வாயிலாக தொடர்பு கொண்டபோது, அது 2018-ம் ஆண்டு கொடுக்கப்பட்டது என்றும், பணம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 4 பேரையும் வங்கி மேலாளர் பிடித்து கீழ்ப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த காசோலை மோசடியில் கோவை தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முருகன், மற்றும் அவரது தோழி சாவித்திரி ஆகியோர் உள்பட 16 பேர் கொண்ட கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன், அவரது தோழி சாவித்திரி உள்பட 7 பேரை கைது செய்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.போலீசாரின் தொடர் விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:

சப்-இன்ஸ்பெக்டர் முருகனின் சொந்த ஊர் திண்டுக்கல். இவர் முதலில் துடியலூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு மனைவி, மகன், மகள் உள்ளனர். இவர் தற்போது துடியலூர் பகுதியில் வசித்து வருகிறார்.

இதற்கிடையே முருகன் துடியலூரில் இருந்து தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு முருகனுக்கு சிங்காநல்லூரை சேர்ந்த மகளிர் குழுவில் உள்ள சாவித்திரி(40) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியது. பின்னர் 2 பேரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு நட்பாக போனில் பேசி வந்துள்ளனர்.

சாவித்திரிக்கு கேரளாவை சேர்ந்த மோசடி கும்பல் தலைவனான பிரசாந்த் மேத்யூ என்பவரின் நட்பு ஏற்பட்டது. அவர் ஒரு நாள் போன் செய்து, சாவித்திரியிடம் சென்னையை சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் பெயரில் காசோலை ஒன்று வந்துள்ளது. அந்த காசோலையை மாற்றி தந்தால் உங்களுக்கு ரூ.11 லட்சம் தருவதாக கூறியுள்ளார்.

ஒரு காசோலையை மாற்றி கொடுப்பதற்கு இவ்வளவு பணம் தருகிறார்களே என சந்தோ‌ஷப்பட்ட சாவித்திரி, இது குறித்து உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் முருகனிடம் தெரிவிக்க நினைத்து அவரை போனில் தொடர்பு கொண்டார்.

அப்போது நாம், தொண்டு நிறுவனத்தின் பெயரில் வந்துள்ள காசோலை ஒன்றை வங்கியில் சென்று மாற்றி கொடுத்தால் ரூ.11 லட்சம் தருவதாக ஒருவர் கூறினார். அதனால் நாம் 2 பேரும் சென்னை சென்று ஜாலியாக சுற்றி பார்த்து விட்டு, கடைசியில் காசோலையை மாற்றி கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை வாங்கி கொண்டு வரலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

பெண் அழைத்தவுடன் முருகனும் வர சம்மதித்துள்ளார். உடனடியாக 7 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்து கொண்ட அவர் சாவித்திரியுடன் சென்னை சென்றார். அங்கு இருவரும் தியாகராய நகரில் அறை எடுத்து தங்கினர். பின்னர் வங்கிக்கு சென்று காசோலையை மாற்ற முயன்று போலீசில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.

தோழியின் நட்பினாலும், அவர் கூறிய ஆசை வார்த்தை நம்பியும் சென்னைக்கு சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தற்போது காசோலை மோசடி வழக்கில் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News