செய்திகள்
நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு தபால் தலையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட காட்சி.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன் உதாரணமாக திகழ்கிறது- நிர்மலா சீதாராமன்

Published On 2021-09-12 10:06 GMT   |   Update On 2021-09-12 10:06 GMT
கொரோனா 2-ம் அலைக்கு பின்னர் கிராமங்களில் மருத்துவமனைகளை மேம்படுத்த மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி உள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழா தூத்துக்குடியில் வங்கி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இன்று நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது. இது சாதாரண வி‌ஷயம் அல்ல. சாதனையாக கருதப்படுகிறது.

1921-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட வங்கி இன்று நாடு முழுவதும் 26 மாநிலங்களில் தனது கிளைகளை வளர்த்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் வங்கி சேவை முக்கிய இடத்தை பிடிக்கிறது. ஏனென்றால் அனைத்து தொழில்களுக்கும் முக்கியமான பணங்கள் இங்கே கையாளப்படுவதால் இது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தான் வங்கிகளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

கட்டுப்பாடுகளுக்கு இடையே தொழிலையும் வளர்த்து மக்களுக்கு உதவும் வகையிலும் வங்கி சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு அவ்வப்போது ஏற்படும் திருத்தங்கள், மாற்றங்களை உள்வாங்கி மக்கள் சேவையில் 100 ஆண்டுகளை எட்டி உள்ளது.

இவ்வாறாக 100 ஆண்டுகளாக ஒரே நிலைப்பாட்டில் சிறந்த நடவடிக்கையால், நல்ல நடத்தையால் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தமிழகத்தில் முன் உதாரணமாக திகழ்கிறது.

தொடர்ந்து பல்வேறு மக்கள் சேவையாற்றி 41 ஆயிரம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நூற்றாண்டு கொண்டாடும் வங்கிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், இன்னும் பல நூறாண்டுகள் மக்கள் சேவையில் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

தற்போது வங்கி துறை நவீன வகையில் மாற்றம் அடைந்து வருகிறது. பிரதமரின் ஸ்ருஜன் திட்டம் மூலம் சிறு தொழில்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது.



கொரோனா 2-ம் அலைக்கு பின்னர் கிராமங்களில் மருத்துவமனைகளை மேம்படுத்த மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி உள்ளது. இதனால் 3-ம் அலையை சமாளிக்க அனைத்து பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இருப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. 130 கோடி மக்கள்தொகை உள்ள நாட்டில் 73 கோடி மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை செயல் அதிகாரி ராமமூர்த்தி, வங்கி தலைவர் அண்ணாமலை, முன்னாள் இயக்குனர் ராஜேந்திரன், தபால் துறை தலைவர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News