செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே ரவுடியை வெட்டி கொலை செய்த 6 பேர் கைது

Published On 2019-03-13 10:09 GMT   |   Update On 2019-03-13 10:09 GMT
தேன்கனிக்கோட்டை அருகே ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேன்கனிக்கோட்டை:

கர்நாடக மாநிலம், பெங்களூரு பொம்மன அள்ளி அருகே மங்கமனப் பான்யா பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 38). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ரவுடியான இஸ்மாயில் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்கு கர்நாடக மாநிலத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் இஸ்மாயில் நேற்று மதியம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனது நண்பர் நஷீர் என்பவரை சந்திப்பதற்காக தனது காரில் வந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து 2 கார்களில் ஒரு கும்பல் வந்துள்ளது. தேன்கனிக்கோட்டை வந்த இஸ்மாயில், நஷீரின் வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாள்களால் இஸ்மாயிலின் முதுகு பகுதியில் சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த காயமடைந்த இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அவரை கொலை செய்த கும்பலை சேர்ந்தவர்கள் அவர்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சங்கீதா, இன்ஸ் பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இஸ்மாயிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக முன் விரோதத்தில் இஸ்மாயில் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்காக போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேன்கனிக் கோட்டை பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருந்த பெங்களூரை அடுத்த பொம்மியன அள்ளி பகுதியைச் சேர்ந்த சையத் இஸ்ராத் (22), சையத் இர்பான் (27), முனவர்(27), சையத் இணையத் (22), சம்சுதீன் (30), தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த நஷீர் உள்பட 6 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் ரகசிய அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

அதில், ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக முன்விரோதத்தால் இஸ்மாயிலை 6 பேரும் சேர்த்து 2 கார்களில் பின் தொடர்ந்து வந்து வெட்டி கொலை செய்தோம் என்றனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெங்களூரை சேர்ந்த கவுஸ் என்பவருக் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

அவர் தலைமறைவாக உள்ளார். தலைமறைவாக உள்ள கவுசை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News