செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

அவர் சொல்வதில் பாதி தான் உண்மை- ஏக்நாத் கட்சே குற்றச்சாட்டுக்கு பட்னாவிஸ் பதில்

Published On 2020-10-22 02:53 GMT   |   Update On 2020-10-22 07:00 GMT
ஏக்நாத் கட்சேவுக்கு தன் மீது அதிருப்தி இருந்தால் மூத்த தலைவர்களிடம் புகார் செய்திருக்கலாம் என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மும்பை:

மகாராஷ்டிராவில் கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது மந்திரியாக இருந்தவர் ஏக்நாத் கட்சே. மூத்த தலைவரான இவர், ஊழல் புகாரில் சிக்கி மந்திரி பதவியை இழந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
 
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் இருந்து விலகினார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கூறி, மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டிருப்பதாக மாநில தலைவரும் உறுதிப்படுத்தினார். பாஜகவில் இருந்து விலகிய ஏக்நாத் கட்சே நாளை தேசியவாத காங்கிரசில் இணைய உள்ளார்.


கட்சியில் இருந்து விலகியது பற்றி கருத்து தெரிவித்த ஏக்நாத் கட்சே, அப்போதைய முதல்வர் (தேவேந்திர பட்னாவிஸ்) மீது குற்றம்சாட்டினார். 

‘ஒரு பெண் அளித்த தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் என் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு போலீசாருக்கு அவர் (பட்னாவிஸ்) அறிவுறுத்தினார். பின்னர் வழக்கு திரும்பப் பெறப்படும் என்றார். எனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டன. விசாரணையின் முடிவில் நான் குற்றமற்றவனாக வெளியே வந்தேன். நான் பாஜகவில் நிறைய கஷ்டப்பட்டேன்’ என்று கட்சே தெரிவித்தார். 

இதுபற்றி பட்னாவிஸ் கூறுகையில், ‘அவர் ராஜினாமா செய்தது துரதிர்ஷ்டவசமானது. அவர் ராஜினாமா செய்திருக்கக்கூடாது. என் மீதான அவரது குற்றச்சாட்டைப் பொருத்தவரை, அவர் பாதி உண்மையைப் பேசுகிறார். அவர் என் மீது மூத்த தலைவர்களிடம் புகார் செய்திருக்கலாம். இந்த தருணத்தில் நான் அதைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் சரியான நேரத்தில் பேசுவேன்’ என்றார்.
Tags:    

Similar News