குழந்தை பராமரிப்பு
ஆன்லைன் வகுப்பு

ஆன்லைன் வகுப்பும்... பாதிக்கப்படும் மாணவர்களின் படிப்பும்...

Published On 2022-01-20 06:27 GMT   |   Update On 2022-01-20 06:27 GMT
தொடர்ந்து நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளால் மாணவ-மாணவிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டு படிப்பே மறந்து போகும் நிலை இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவலையடுத்து பள்ளிகள் மூடப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து 18 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றன.

இதற்கிடையே கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததையடுத்து முதலில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன் பின்னர் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

18 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு பெரிய வகுப்பு மாணவர்களுக்கு 2 மாதங்கள் வரையிலும் சிறிய வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மாதம் வரையிலுமே மீண்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்றுள்ளன.

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதையடுத்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளால் மாணவ-மாணவிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டு படிப்பே மறந்து போகும் நிலை இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேரடி வகுப்புகளின் போதே பல மாணவர்கள் பாடங்களை சரியாக கவனிக்க மாட்டார்கள். இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களின் படிப்பு பல மடங்கு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

பள்ளி கல்வியை பொறுத்தவரையில் ஆரம்ப கல்வி மிகவும் முக்கியமானதாகும் அடிப்படை சரியாக இருந்தால் மட்டுமே மாணவர்களால் அடுத்தடுத்த வகுப்புகளில் சரியாக படிக்க முடியும்.

ஆனால் தற்போது பல மாணவர்கள் ஆங்கில எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்கள் தெரியாமலேயே தேர்ச்சி பெற்று விடும் நிலையே உள்ளது. இது எதிர்காலத்தில் அவர்களது கல்வி திறனை பாதிக்கும் என்றும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அதிலும் பல மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் சரியான புரிதலை ஏற்படுத்துவது இல்லை.

அதே நேரத்தில் சிறிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் இருந்தபடியே வீடுகளில் நடக்கும் மற்ற வி‌ஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள். பலர் ஆன்லைன் வகுப்பில் இருந்தபடியே விளையாடவும் செய்கிறார்கள்.

இப்படி ஆன்லைன் வகுப்புகளால் பள்ளிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே பழகிவிட்ட 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பலர் பள்ளிகளுக்கு செல்வதற்கு தயங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட நேரத்தில் பல இடங்களில் பள்ளிகளுக்கு செல்ல மாட்டேன் என்று மாணவர்கள் அடம் பிடித்ததே இதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகளால் மற்ற பாடங்களை விட ஆங்கிலம், கணித பாடங்களை கற்பதில் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். கணித பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை நேரடி வகுப்புகள் நடைபெறும்போது மாணவர்களால் ஆசிரியர்களிடம் கேட்டு எளிதாக நிவர்த்தி செய்ய முடியும்.

ஆனால் ஆன்லைன் வகுப்புகளில் அதுபோன்று உடனுக்குடன் சந்தேகங்களை மாணவர்களால் தெளிவுபடுத்த முடியாத நிலையே உள்ளது.

ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்களுடன் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று நடைபெறும் ஆன்லைன் தேர்வுகளில் ஒருசில மாணவர்களை தவிர பெரும்பாலான மாணவர்கள் காப்பி அடித்து தேர்வு எழுதி உள்ளனர். இது அவர்கள் வாங்கிய அதிக மதிப்பெண் மூலம் தெரிய வந்துள்ளது.

இதே பாணியை பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கு நடைபெற்ற நேரடி தேர்வுகளின்போது சில மாணவர்கள் கடைபிடித்து உள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவலையும் ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

எனவே சுழற்சி முறையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்தினால் மட்டுமே அவர்களது கல்வி கற்றல் திறன் பாதிக்காமல் இருக்கும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் கூறும்போது, தனியார் பள்ளிகளில் செல்போன் மூலமாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த பாடங்களை அவர்கள் கவனிப்பது போன்று புகைப்படங்களை எடுத்து அனுப்ப அறிவுறுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.

18 மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நேரடி வகுப்புகள் மூலம் மாணவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தோம். அதற்குள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

மாணவர்களின் கற்றல் திறன் பாதிப்பை இல்லம் தேடி கல்வி திட்டம் நிச்சயம் சரி செய்யும் என்கிற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News