செய்திகள்
திமுக

சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

Published On 2019-12-06 07:29 GMT   |   Update On 2019-12-06 12:56 GMT
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 8-ந்தேதி மாலை 5 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந் தேதி அறிவித்தது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். தொகுதி வரையறை பணிகள் முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டது.

இந்த மனு மீதான விவாதம் நேற்று நடந்தது. இன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், சமீபத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று உத்தரவிட்டது.

தேர்தல் நிறுத்தப்பட்ட மாவட்டங்களில் 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோர்ட்டு அறிவித்தது.

இதையடுத்து, ஊரக உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது பற்றி ஆலோசிப்பதற்காக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த தி.மு.க. முடிவு செய்துள்ளது.


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தியாகராயநகரில் உள்ள ஓட்டல் அக்கார்ட்டில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டம் குறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் உள்ள அரங்கில் நடைபெறுகிறது.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இதில் உள்ளாட்சி மன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News