செய்திகள்
மரணம்

தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி

Published On 2020-11-22 07:33 GMT   |   Update On 2020-11-22 07:33 GMT
கோவை தொண்டாமுத்தூர் அருகே இன்று அதிகாலை யானை தாக்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடவள்ளி:

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த பூலுவம்பட்டி வனப்பகுதியையொட்டி குப்பே பாளையம், அத்திக்கல், தேவராயபுரம் பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் அடிக்கடி யானை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.

குப்பேபாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பாப்பம்மாள்(வயது70). இவர் இன்று அதிகாலை 6.15 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டை விட்டு வெளியில் வந்தார். வீட்டில் இருந்து 20 மீட்டர் தொலைவில் சென்ற போது எதிரே காட்டு யானை ஒன்று வந்தது.

இதை பார்த்ததும் அதிர்ச்சியான பாப்பம்மாள் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் யானை தும்பிக்கையால் பாப்பம்மாளை தூக்கி ரோட்டில் வீசி காலால் மிதித்து கொன்றது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து யானையை காட்டுக்குள் விரட்டினர்.

இதற்கிடையே இந்த பகுதியில் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருப்பதால் இதற்கு நிரந்த தீர்வு வேண்டும். அதுவரை உடலை எடுக்க விடமாட்டோம் என கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

இந்த பகுதியில் அடர்ந்த வனத்தையொட்டி கழிவறை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு செல்லும் போது இது போன்ற சம்பவங்கள் நடந்து விடுகிறது. எனவே ஊருக்கு அருகேயே கழிவறை கட்டி தர வேண்டும். மேலும் தெருவிளக்குகள் எரியவில்லை. அதனையும் மாற்றி தரவேண்டும். தொடர்ந்து இந்த பகுதிகளில் பகல் நேரங்களிலேயே குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் சர்வ சாதாரணமாக சுற்றி திரிகின்றன.

இதனால் நாங்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறோம். எனவே இதற்கு எங்களுக்கு ஒரு நிரந்த தீர்வு வேண்டும். அதற்கு பூலுவம்பட்டி வனசரக அதிகாரி இங்கு வந்து எங்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.

அதுவரை உடலை எடுக்க மாட்டோம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

இதேபோல் குப்பே பாளையம் அடுத்த வாத்தியார் தோட்டம் பகுதியில் மற்றொரு யானை புகுந்தது. அப்போது வீட்டை விட்டு வெளியில் வந்த ராணியம்மாள் என்பவரை யானை தாக்கியது. இதில் காலில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News