ஆன்மிகம்
பெருவுடையாருக்கு 1000 கிலோ அரிசி மற்றும் 500 கிலோ காய்கறிகளால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டிருந்ததை காணலாம்.

தஞ்சை பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசி- 500 கிலோ காய்கறியால் அன்னாபிஷேகம்

Published On 2020-11-01 03:32 GMT   |   Update On 2020-11-01 03:32 GMT
ஐப்பசிமாத பவுர்ணமி தினத்தையொட்டி தஞ்சை பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கறியால் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். என்றாலும் முக்கிய கோவில்களில் அன்னாபிஷேக வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படும். அப்படிப்பட்ட கோவில்களில் ஒன்று தஞ்சை பெரியகோவில்.

மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் இன்றைக்கும் தமிழர்களின் பெருமையை உலகத்திற்கு பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது. உலக பாரம்பரிய சின்னமான பெரிய கோவில் சிற்பக்கலைக்கும், கட்டிடக் கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. பக்தர்களால் வழங்கப்பட்ட பச்சரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது. வெண்டைக்காய், புடலங்காய், கேரட், கத்தரிக்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பீட்ரூட், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளாலும், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களாலும், இனிப்புகள், மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது.

1000 கிலோ(1 டன்) பச்சரிசியும், 500 கிலோ காய்கறிகள், 250 கிலோ மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பெருவுடையாருக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. அன்னாபிஷேகத்தையொட்டி பெருவுடையாரை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர்.

அன்னாபிஷேகத்தையொட்டி பெருவுடையாரை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர். அவர்கள் வரிசையாக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் குறிப்பிட்ட அளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பிறகு மற்றவர்கள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வரிசை ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இரவில் பெருவுடையார் திருமேனி மீது சாத்தப்பட்டிருந்த அன்னம் பிரித்தெடுக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்யப்பட்டது.மேலும் கால்நடைகளுக்கு உணவாகவும் வழங்கப்பட்டது. மீதமுள்ள சாதத்தை பெரியகோவிலில் அருகே செல்லும் கல்லணைக்கால்வாயில் கொட்டினர். அந்த சாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக பயன்பட்டது.

இதேபோல் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. அனைத்து கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News