செய்திகள்
சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவின் பேட்டிங் அற்புதமாக இருந்தது - கேப்டன் தவான் புகழாரம்

Published On 2021-07-26 10:41 GMT   |   Update On 2021-07-26 10:41 GMT
தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தனது முதல் ஆட்டத்திலேயே நேர்த்தியாக பந்து வீசினார் என இந்திய அணியின் கேப்டன் தவான் கூறியுள்ளார்.
கொழும்பு:

இலங்கைக்கு எதிரான முதல் 20 ஒவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த இந்தப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது.

சூர்யகுமார் யாதவ் 34 பந்தில் 50 ரன்னும் (5பவுண்டரி, 2சிக்சர்), கேப்டன் ஷிகர் தவான் 36 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி, 1சிக்சர்) எடுத்தனர். சமீரா, ஹசரன்கா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய இலங்கை 18.3 ஓவர்களில் 126 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 38 ரன்னில் அபார வெற்றி பெற்றது. அசலன்கா அதிகபட்சமாக 26 பந்தில் 44 ரன் ( 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். புவனேஸ்வர் குமார் 22 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். தீபக் சாஹர் 2 விக்கெட்டும், குர்ணால் பாண்ட்யா, வருண் சக்கரவர்த்தி, சாஹல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் தவான் கூறியதாவது:-

10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டதாக முதலில் கருதினேன். பின்னர் ஆடுகளத்தை கணித்து பார்த்த போது இது நல்ல ஸ்கோர் என்பதை உணர்ந்தேன்.

புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. வருண் தனது முதல் ஆட்டத்திலேயே நேர்த்தியாக பந்து வீசினார். சூர்யகுமார் யாதவின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. பிரித்விஷா சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவர் அடுத்த ஆட்டத்தில் நல்ல நிலைக்கு திரும்புவார்.

இவ்வாறு தவான் கூறி உள்ளார்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2-வது ஆட்டம் நாளை நடக்கிறது.
Tags:    

Similar News