செய்திகள்
டிரம்ப்

டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை உருவாக்க டிரம்ப் திட்டம்

Published On 2021-01-09 03:29 GMT   |   Update On 2021-01-09 03:34 GMT
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து இன்னும் சில நாட்களில் வெளியேற உள்ள டொனால்டு டிரம்ப், டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதுடன், அவர் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.

இதனால் வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கின. அதன்பின்னர் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டது. மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அதிபர் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் (போடஸ்) தனது கருத்தை பதிவு செய்தார். அதில் டுவிட்டர் நிறுவனம் பேச்சு சுதந்திரத்தை தடை செய்வதாகவும், தன்னை பேசாமல் அமைதியாக இருக்கச் செய்வதற்காக தனது கணக்கை நீக்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். டுவிட்டர் ஊழியர்கள் ஜனநாயக கட்சி மற்றும் தீவிர இடதுசாரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறினார். 

கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யும் வகையில், எதிர்காலத்தில் சொந்த தளத்தை (டுவிட்டருக்கு மாற்றாக) உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் டிரம்ப் கூறினார். பின்னர், சில நிமிடங்களில் அந்த டுவீட்டுகள் நீக்கப்பட்டன. 
Tags:    

Similar News