செய்திகள்
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலை வெள்ளம் சூழ்ந்தது

நெல்லை தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

Published On 2021-01-06 04:01 GMT   |   Update On 2021-01-06 04:01 GMT
மணிமுத்தாறு அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருவதால் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலை 7 மணி நிலவரப்படி 142.55 அடியாக இருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் 2 ஷட்டர்கள் வழியாக முதலில் 3,000 கனஅடி தண்ணீரும், பின்னர் 3,500 கனஅடியும் திறந்து விடப்பட்டது. காலை 11 மணி நிலவரப்படி 4 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதேபோல் 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 141.60 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 114.35 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 3 அடி தண்ணீர் மட்டுமே தேவையாக உள்ளது. அணையில் இருந்து நேற்று 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. தாமிரபரணி ஆற்றில் உள்ள சுடலைமாடசாமி, கருப்பசாமி மற்றும் அம்மன் கோவில்களையும் வெள்ளம் மூழ்கடித்து சென்றது.

மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையிலும் வெள்ளப்பெருக்கு குறையாததால் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவிகளில் ஆனந்தமாக குளித்து சென்றனர்.
Tags:    

Similar News