ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

சொர்க்கத்தை பரிசாகப் பெறலாம்

Published On 2021-04-26 06:58 GMT   |   Update On 2021-04-26 06:58 GMT
காலங்களில் சிறந்தது வசந்த காலம். கடும் உஷ்ணமும், கடுங்குளிரும் இல்லாத காலம் வசந்த காலம் என போற்றப்படுகிறது. அதுபோல, இறைவிசுவாசிகளின் வசந்த மாதம் என்று வர்ணிக்கப்படுகின்றது புனித ரமலான் மாதம்.
புனித ரமலானுக்கு ‘ரபீஉல் முஃமினீன்’- ‘இறைவிசுவாசிகளின் வசந்த மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

காலங்களில் சிறந்தது வசந்த காலம். கடும் உஷ்ணமும், கடுங்குளிரும் இல்லாத காலம் வசந்த காலம் என போற்றப்படுகிறது. அதுபோல, இறைவிசுவாசிகளின் வசந்த மாதம் என்று வர்ணிக்கப்படுகின்றது புனித ரமலான் மாதம்.

ஏனெனில், புனித ரமலான் வந்துவிட்டால், முஸ்லிம்களின் மனதில் மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் பிறந்து விடுகின்றது. நோன்பு வைப்பது, இறைவழிபாடுகளில் அதிகம் ஈடுபடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றில் அவர்களுக்கு அதிக ஈடுபாடும், ஆர்வமும் ஏற்படுகிறது.

இதற்கு காரணம், புனித ரமலான் வந்துவிட்டால், சுவனம் அலங்காரம் செய்யப்படுகிறது; சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன; மேலும் வானத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. சுவனத்தின் வசந்தம் வானத்தின் வழியாக இவ்வையகத்திற்கு வந்து சேரும் மாதம் புனித ரமலான் மாதம் என்கிறது இந்த நபி மொழிகள்:

‘ரமலான் மாதம் வந்துவிட்டால், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

‘நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு. 1) நோன்பு திறக்கும் நேரம்; 2) தமது இறைவனை காணும் நேரம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

உண்மையான வசந்தகாலம் பரிசாகத் தரக்கூடிய எல்லாவிதமான மாற்றங்களையும், முன்னேற்றங்களையும், இதமான சந்தோஷங்களையும் புனித ரமலான் இறைவிசுவாசிகளுக்கு கொடையாக அளிக்கிறது. உண்மையான விசுவாசிகளுக்கு ரமலான் மாதமும் ஒரு வசந்தகாலம் தான்.

‘சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமைநாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அந்த வாசல் அடைக்கப்பட்டு விடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரி)

‘சொர்க்கத்தில் எட்டுவாசல் உள்ளன. அதில் ‘ரய்யான்’ என்று அழைக்கப்படும் வாசலும் உண்டு. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் சஅத் (ரலி), நூல்: புகாரி)

‘இறைவழியில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டவர் சொர்க்கத்தின் வாசல்களில் ஒவ்வொன்றில் இருந்தும் ‘அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்தது; இதன் வழியாகப் பிரவேசியுங்கள்’ என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளி ‘தொழுகை வாசலிலிருந்தும், அறப்போர் புரிபவர் ‘ஜிஹாத்’ வாசலிலிருந்தும், தர்மம் செய்பவர் ‘ஸதகா’ வாசலிலிருந்தும், நோன்பாளி ‘ரய்யான்’ வாசலிலிருந்தும் அழைக்கப்படுவார் என நபி (ஸல்) கூறினார்கள். உடனே அபூபக்ர் (ரலி) ‘இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படுபவருக்குத் துன்பம் ஏதும் இருக்காது; அவை அனைத்திலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ‘நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

நாமும் ரமலான் கடமைகளை சிறப்பாக நிறைவேற்றி சொர்க்கத்தை பரிசாகப் பெறுவோம், ஆமின்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

இப்தார்: மாலை 6.38 மணி

நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
Tags:    

Similar News