ஆன்மிகம்
50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2019-07-06 03:33 GMT   |   Update On 2019-07-06 03:33 GMT
கன்னட ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மைசூரு அருகே சாமுண்டி மலையில் காவல்தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் குடிக்கொண்டிருக்கிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் கன்னட ஆடி மாதத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான கன்னட ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை முதல் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு சாமுண்டிமலையில் உள்ள தெப்பக்குளத்தில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மகா ஸ்ஞான அபிஷேகம், ருத்ராபிஷேகம், பஞ்சாபிஷேகம் நடந்தது. அதைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் குங்கும அர்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

அதைதொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி புரிந்தார். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் நள்ளிரவு முதலேயே கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர்.

மாநில உயர்கல்வித் துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ஜி.டி.தேவே கவுடா, எம்.எல்.ஏ.க்கள் ராமதாஸ், நாகேந்திரா, கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் ஆகியோர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். விரதம் இருந்த ஏராளமான பெண், ஆண் பக்தர்கள் சாமுண்டிமலை அடிவாரத்தில் இருந்து 1,200 படிக்கட்டுகள் வழியாக நடந்தே சென்று அம்மனை தரிசனம் செய்தனர். அவர்கள் ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் மஞ்சள், குங்குமமிட்டு கற்பூரம் கொளுத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியதை காண முடிந்தது. மேலும் சில பக்தர்கள் எலுமிச்சை சாதம், தயிர்சாதம், கூழ், பானகம் கொடுத்தனர்.

மைசூரு இளவரசர் யதுவீர் உடையார் சாமுண்டீஸ்வரி அம்மனை சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். ஆனால் அவரை ஒரு போலீஸ்காரர் கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மற்றொரு போலீஸ்காரர் அங்கு வந்து யதுவீர் உடையாரை கோவிலுக்குள் அனுமதித்தார். அதாவது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு யதுவீர் உடையார் இளவரசர் என்பது தெரியவில்லை என்றும், அதனால் அவரை கோவிலுக்குள் அந்த போலீஸ்காரர் விட மறுத்ததாகவும் கூறப்படுகிறது.



அதுபோல் கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக திகழும் தர்ஷன் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். முன்னதாக அவர் கோவிலுக்கு வந்த போது அவரை பார்க்க பொதுமக்கள் கூடிவிட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களை ஒழுங்குப்படுத்தி நடிகர் தர்ஷன் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுப்பிவைத்தனர்.

பின்னர் அவர் சாமி தரிசனம் முடித்துவிட்டு வந்த பிறகும் போலீசார் பாதுகாப்பாக அவரை அனுப்பிவைத்தனர். கன்னட ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று காலை முதல் மாலை வரை சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையொட்டி சாமுண்டி மலையில் உள்ள அன்னதான பவனில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம், பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்களின் வசதிக்காக சாமுண்டி மலை அடிவாரத்தில் இருந்து மலையில் உள்ள கோவில் வரை இலவசமாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அத்துடன் பக்தர்களின் வசிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி மைசூரு மாநகரில் ஆங்காங்கே மக்கள் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். கடந்த சில நாட்களாக மைசூருவில் வெயில் சுட்டெரித்து வந்தது. ஆனால் நேற்று காலை முதல் வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்தது. மேலும் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் நீண்ட வரிசையில் காத்து நின்றாலும் பக்தர்கள் எந்த சிரமமுமின்றி சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்து சென்றனர். 
Tags:    

Similar News