செய்திகள்
மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயாராக இருப்பதை காணலாம்.

கோவில்பட்டியில் அறுவடைக்கு தயாரான மஞ்சள் குலைகள்

Published On 2021-01-11 05:22 GMT   |   Update On 2021-01-11 05:22 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி பகுதியில் பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயாராக உள்ளன.
கோவில்பட்டி:

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் உழைத்த விவசாயிகள் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தங்களது விளைபொருட்களை படைத்து, புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்வர். வீடுகளின் முன்பு கரும்புகள், மஞ்சள் குலைகளை கட்டி வைத்து இருப்பார்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியில் சில விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டு உள்ளனர். 6 மாத பயிரான மஞ்சள் குலைகளுக்கு கிணற்று பாசனம் மூலம் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி நன்கு உரமிட்டனர். இதனால் மஞ்சள் குலைகள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.

இதுகுறித்து மந்திதோப்பு விவசாயிகள் கூறியதாவது:-

ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரையிலும் செலவு செய்து மஞ்சள் பயிரிட்டு உள்ளோம். இங்கு பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் குலைகளை விரைவில் அறுவடை செய்து, கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புவோம். ஒரு மஞ்சள் குலை ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் விற்பனை செய்யப்படும்.அடுத்த ஆண்டிலாவது ரேஷன் கடைகளில் கரும்புடன் மஞ்சள் குலையும் சேர்த்து வழங்கினால் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News