உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

மண்பாண்டம் - அடுப்பு செய்யும் பணி தீவிரம்

Published On 2022-01-07 09:47 GMT   |   Update On 2022-01-07 09:47 GMT
பொங்கல் பண்டிகைக்காக மண்பாண்டம்-அடுப்பு செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
பூதலூர்:

தமிழர்கள் வாழ்வோடு இணைந்த விழா தைப்பொங்கல் திருநாள். தைப்பொங்கல் நாளில் புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கல், கரும்பு, வாழைப்பழத்துடன் படையலிட்டு உழவர்களின் வாழ்க்கைக்கு உயிரூட்டும் சூரியனுக்கு படைத்து வழிபடுவது வாடிக்கை. 

தைப்பொங்கல் நாளில் பொங்கல் வைப்பதற்கு விவசாயிகள் பெரும்பான்மையாக மண்பானைகளை பயன்படுத்துவார்கள. பொங்கல் பண்டிகைக்கான மண்பாண்ட தொழிலாளர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பொங்கல் பானைகள், மண் அடுப்புகள், மண்ணாலான பொங்கல் பானை மூடிகள் ஆகியவற்றை தயார் செய்வார்கள். 

இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அக்டோபர் 
மாதத்திலிருந்து கொட்டித் தீர்த்த மழையால் மண்பாண்ட 
தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் புதுச்சத்திரம், அய்யனாபுரம், நாச்சியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகைக்கான பல்வேறு அளவுகளில் சிறிதும் பெரிதுமாக மண்பானைகள் அதற்கேற்ற வகையில் அடுப்புகளை தயார் செய்வது வழக்கம். 

இந்த ஆண்டு மழையால் மண்பாண்டம் தயார் செய்வதற்கு மண் எடுத்து வைத்திருந்த மண் மழையால் சேதமடைந்தது. மணல் எடுக்க இயலாதசூழல். இதுபோல் பல்வேறு நிலைகளில் கட்டுப்பாடுகள் காரணமாக திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பாண்டங்கள் செய்வதில் சிரமப்பட்டனர்.

மழை ஓய்ந்து திருக்காட்டுப்பள்ளி அடுத்த புதுச்சத்திரம் கிராமத்தில் உள்ள மண்பாண்ட தொழிலாளர் ரமேஷ் குடும்பத்தினர் தற்போது வேக வேகமாக பணிகளை செய்து வருகின்றனர்.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக செய்துவைத்த மண்பாண்டங்கள் காய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், காய்ந்த பின்னர் சூளையில் வைத்து எடுப்பதற்கு வைக்கோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை அதிகமாக இருப்பதாலும், இந்த பொங்கல் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இனிப்பாக இருக்காது என்று தெரிவிக்கின்றனர். 

இதனால் இந்த ஆண்டு வெளி மாவட்டங்களில் இருந்து மண் பண்டங்கள் வாங்கி விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்கள் மண்பாண்டத் தொழிலாளர்களை ஆதரித்து பொங்கலுக்கு அதிக அளவில்  மண்பாண்டங்களை வாங்கி பயன்படுத்தவேண்டும்என்று மண்பாண்டத் தொழிலாளி ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் உரிய உதவிகள் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News