செய்திகள்
குடிநீர்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 95 சதவீதம் நீர் இருப்பு

Published On 2021-01-25 02:00 GMT   |   Update On 2021-01-25 02:00 GMT
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 95 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:

சென்னை மாநகருக்கு மாதம் 1 டி.எம்.சி. தண்ணீர் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சராசரியாக தினசரி 830 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான தண்ணீர் ஏரிகளில் தற்போது கூடுதலாகவே இருப்பு இருந்து வருகிறது.

குறிப்பாக பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கடந்த சில வாரங்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும் ஏரிக்கு தண்ணீர் வந்தது.

அதன்படி ஏரிகள் வாரியாக, பூண்டி - 97.77 சதவீதம், சோழவரம் - 81.50 சதவீதம், புழல்- 98.27 சதவீதம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை - 96.80 சதவீதம், செம்பரம்பாக்கம் - 92.73 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

இதுதவிர வீராணம் ஏரியில் 48.60 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. சராசரியாக அனைத்து அணைகளிலும் சேர்த்து 94.81 சதவீதம், அதாவது 95 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அத்துடன் நெம்மேலி, மீஞ்சூர் பகுதியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்தும் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. கோடைகாலத்திலும் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News