செய்திகள்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா நிலவரம்- 230 நாட்களில் இல்லாத அளவில் குறைந்தது

Published On 2021-10-18 04:36 GMT   |   Update On 2021-10-18 07:09 GMT
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 74 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 166 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,52,290 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த 1½ வருடமாக மக்களை பாதித்து வரும் கொரோனா தற்போது கட்டுக்குள் உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1.39 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 18 மாதங்களுக்கு பிறகு மும்பையில் நேற்று கொரோனாவுக்கு உயிரிழப்புகள் இல்லை என மும்பை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் மும்பை மாநகர மக்கள் தொகையில் 97 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாகவும், 55 சதவீதம் பேருக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறினர்.

இன்னும் 3 அல்லது 4 நாட்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் எண்ணிக்கை 100 சதவீதத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கை நோக்கி செயல்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இது 230 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.

கடந்த 7-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 21 ஆயிரமாக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து 10 நாட்களாக பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 81 ஆயிரத்து 315 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 7,555, மகாராஷ்டிராவில் 1,715, தமிழ்நாட்டில் 1,218 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 74 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 166 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,52,290 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவின் பிடியில் இருந்து மேலும் 19,582 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 39 ஆயிரத்து 331 ஆக உயர்ந்தது.

தற்போது 1,89,694 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை நேற்று முன்தினத்தை விட 6,152 குறைந்துள்ளது. மேலும் இது 221 நாட்களில் இல்லாத அளவு குறைவு ஆகும்.


நாடு முழுவதும் நேற்று 12,05,162
தடுப்பூசிகள்
மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 97 கோடியே 79 லட்சத்தை கடந்துள்ளது.

இதற்கிடையே நேற்று 9,89,493 மாதிரிகளும், இதுவரை 59.19 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News