செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

வட தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2020-10-25 02:08 GMT   |   Update On 2020-10-25 02:08 GMT
வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 28-ந் தேதி தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு இன்னும் 3 தினங்களே உள்ளன. அதற்கு முன்னோட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வருகிற 26, 27 மற்றும் 28-ந் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இன்று மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளில் கடலுக்குள் மீனவர்கள் செல்லவேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News