உலகம்
அமெரிக்கா கொடி

உக்ரைனில் பொம்மை அரசு அமைக்க முயற்சி செய்யவில்லை- அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு ரஷியா பதில்

Published On 2022-01-24 06:01 GMT   |   Update On 2022-01-24 06:01 GMT
உக்ரைனில் எங்கள் ஆதரவு தலைவரை பதவியில் அமர்த்த முயற்சி செய்ததாக நேட்டோ நாடுகள் கூறுகின்றன. இதன் மூலம் உக்ரைனில் தேவையில்லாத பதட்டத்தை அந்த நாடுகள் உருவாக்குகின்றது.

மாஸ்கோ:

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து அதை கைப்பற்ற ரஷியா திட்டமிடுவதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டின.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் ரஷியாவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் ரஷியா தனது நடவடிக்கைகளை நிறுத்தியது.

இதற்கிடையே உக்ரைன் நாட்டில் தனக்கு ஆதரவாக இருக்கும் முன்னாள் எம்.பி. எவென் முரயெவை ஆட்சியில் அமர வைத்து பொம்மை அரசாங்கத்தை நடத்த ரஷியா திட்டமிடுவதாக தெரியவந்தது. இதுதவிர உக்ரைன் நாட்டு தலைவர்கள் பலரிடமும் ரஷியா மறைமுகமாக தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

உக்ரைன் அரசை சீர் குலைக்க ரஷியா திட்டமிட்டு இப்படி செயல்படுவதாக இங்கிலாந்து குற்றம்சாட்டி உள்ளது. இதை ரஷியா மறுத்துள்ளது.

இதுகுறித்து ரஷிய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உக்ரைனில் எங்கள் ஆதரவு தலைவரை பதவியில் அமர்த்த முயற்சி செய்ததாக நேட்டோ நாடுகள் கூறுகின்றன. இதன் மூலம் உக்ரைனில் தேவையில்லாத பதட்டத்தை அந்த நாடுகள் உருவாக்குகின்றது.

உக்ரைன் நாட்டு விவகாரத்தில் நாங்கள் தலையிடுவதில்லை. உக்ரைனில் பொம்மை ஆட்சி அமைக்க நாங்கள் எந்த வகையிலும் முயற்சி செய்யவில்லை.

இவ்வாறு ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதற்கிடையே உக்ரைனில் இருந்து தனது நாட்டு அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றத்தொடங்கி உள்ளது. உக்ரைன், ரஷியா நாடுகளுக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் சீனாவுக்கும் புதிய எச்சரிக்கை ஒன்றை அமெரிக்கா இன்று விடுத்துள்ளது. தைவான் விவகாரத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று சீனாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதையும் படியுங்கள்... 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை- மத்திய அரசு அறிவிப்பு

Tags:    

Similar News