செய்திகள்
அரக்கோணம் பகுதிகளில் செடியில் பூத்துக் குலுங்கியுள்ள சம்பங்கி பூக்கள்

கொரோனா ஊரடங்கால் பறிக்கப்படாமல் செடியிலேயே வீணாகும் மலர்கள்- விவசாயிகள் வேதனை

Published On 2021-05-18 09:11 GMT   |   Update On 2021-05-18 09:11 GMT
கொரோனாவால் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வியாபாரிகளும் வியாபாரத்திற்கு செல்ல முடியாமல் மனவேதனை அடைந்துள்ளனர்.
அரக்கோணம்:

கொரோனா பரவல் 2-வது அலையின் வேகம் தீவிரமாக இருப்பதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இதனால் தமிழக அரசு கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை ஊரடங்கை பிறப்பித்துள்ளது. பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வியாபாரிகளும் வியாபாரத்திற்கு செல்ல முடியாமல் மனவேதனை அடைந்துள்ளனர்.

அரக்கோணம் அடுத்த காவனூர் நரசிங்கபுரமத்தில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகை, முல்லை, கனகாம்பரம், பன்னீர் ரோஜா, கலர் காக்டா, மூக்குத்தி ரோஸ், நந்திவட்டான், சம்பங்கி ஆகிய பூக்கள் பறிக்காமல் செடியிலேயே உதிர்ந்தும், அழுகியும் வீணாகிறது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

காவனூர் நரசிங்கப்புரத்தில் உற்பத்தியாகும் பூக்கள் இங்கிருந்து ரெயிலில் சென்னைக்கும், காஞ்சிபுரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்வோம். ஊரடங்கு உத்தரவால் பூக்களை எடுத்து செல்ல முடியவில்லை.

பூச் செடி நட்ட கூலிக்கும், பூ பறிக்கும் கூலிக்காவது வரட்டும் என்று பறித்து உள்ளூரில் பைக்குகளில் விற்பனை செய்து வந்தோம். இப்போது அதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர். தெருக்களிலும் பூ வியாபாரம் செய்யக்கூடாது என்று தடுத்து அபராதம் விதிக்கின்றனர்.

சென்னை, காஞ்சிபுரம் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்ய முடியாமல் போனதால் மல்லிகை பூ கிலோ 30 ரூபாய்க்கும், முல்லை ஒரு சேர் 5 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்தோம்.

இப்போது உள்ளூரில் விற்பதற்கு அனுமதி மறுப்பதால் எதற்கு பறிக்க வேண்டும் என்று செடியிலேயே விட்டுவிடுவதால் பூக்கள் உதிர்ந்தும், அழுகியும் வீணாகிறது. காய்கறி கடைகளுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதி தந்து இருப்பது போல் பூ விற்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு பூ விவசாயிகள் மன வேதனையுடன் கூறினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதுபோல் ஏக்கர் கணக்கில் பூச்செடிகள் பயிரிட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வந்தவாசியில் கோழிக்கொண்டை பூ பயிரிடப்பட்டுள்ளனர். இந்த கோழி கொண்டை பூவும் பறிக்கப்படாமல் செடியிலேயே அழுகியும் வீணாகி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமாங்கலம், ஆரணி, போளூர், செய்யாறு, செங்கம் பகுதிகளிலும், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு, ஒடுக்கத்தூர் பகுதியிலும் பூக்கள் செடியில் பறிக்கப்படாமல் வீணாகி வருகிறது.

இதனால் பூ விவசாயிகள் கடுமையான வேதனையில் உள்ளனர்.



Tags:    

Similar News