செய்திகள்
ஏகே அந்தோணி, ராஜ்நாத் சிங், சரத் பவார்

சீன எல்லையில் நடப்பது என்ன? -முன்னாள் ராணுவ அமைச்சர்களிடம் விளக்கிய ராஜ்நாத் சிங்

Published On 2021-07-16 15:26 GMT   |   Update On 2021-07-16 15:26 GMT
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, சீனாவுடனான எல்லைப் பிரச்சனையை காங்கிரஸ் கட்சி எழுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, சீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்து பேசப்பட்டது. சீன எல்லையில் தற்போதைய நிலை குறித்து ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின்போது, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நரவனே ஆகியோர் உடனிருந்தனர்.  

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 19ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இன்று நடைபெற்ற சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 



சீனா - இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து, மத்திய அரசின் செயல்பாடுகளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்திய நிலப்பகுதியை சீனா கைப்பற்றி உள்ளதாகவும், அதுபற்றி பிரதமர் மவுனம் காப்பதாகவும் கூறி உள்ளார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, சீனாவுடனான எல்லைப் பிரச்சனையை காங்கிரஸ் கட்சி எழுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்தும் முயற்சியாகவே இன்றைய சந்திப்பு பார்க்கப்படுகிறது. ஏகே அந்தோணி மற்றும் சரத் பவார் இதற்கு முன்பு பாதுகாப்புத்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பதால், நிலைமையை அவர்களிடம் விளக்கி உள்ளார் ராஜ்நாத் சிங்.
Tags:    

Similar News