உள்ளூர் செய்திகள்
கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு

கொட்டாரம் நரிக்குளம் ஸ்ரீமன் நாராயண சாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

Published On 2022-04-17 08:53 GMT   |   Update On 2022-04-17 08:53 GMT
கொட்டாரம் நரிக்குளம் ஸ்ரீமன் நாராயண சாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நரிக்குளத்தில் ஸ்ரீமன் நாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ரூ.10 லட்சம் செலவில் 27 அடி உயர கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. 

இதைத்தொடர்ந்து இந்த புதிய கோபுரத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் மாலையில் ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து முட்டப்பதி பாற்கடலில் பதமிட்டு திருப்பதம் எடுத்தனர்.

அதன்பிறகு சாமிதோப்பு தலைமை பதியில் இருந்து முத்திரி பதம், மருந்துவாழ் மலை ஸ்ரீஅனுமன் சுனைப்பதம், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து தாணுதீர்த்தம், நரிக்குளம் கோவில் கிணற்று பதம், நரிக்குளம் தீர்த்தம் பால் சந்தன பால் இளநீர் பழம் பன்னீர் பதம் ஆகியவற்றை மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து பூஜையில் வைத்தனர். 

அதைத் தொடர்ந்து கோபுரகும்பத்தில் தானியம் நிரப்பு நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு முதல் கால பூஜையும் மங்கள இசை தேவதா அனுஞ்சை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பிரவேசபலி, ரக்ஷாபந்தனம், வாஸ்து பூஜை, கலா ஆகர்ஷணம், கும்ப அலங்காரம், முதல் கால வேள்வி வளர்த்தல், திரவியாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, மற்றும் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி போன்றவை நடந்தது. 

2-வது நாளான நேற்று காலையில் இரண்டாம் கால பூஜையும் அதைத் தொடர்ந்து மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜை, கலச பூஜை, வேதபாராயணம், திரவியாஹூதி, மகா பூர்ணா ஹூதி, தீபாராதனை, போன்றவை நடந்தது. 

அதன் பிறகு ஸ்ரீமன் நாராயண சாமி சிலை அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் விமான கோபுரத்துக்கும் மகா கும்பாபிஷேம் நடந்தது. அதைத்தொடர்ந்து சிற்றுண்டி வழங்குதலும் பகல் 12 மணிக்கு அலங்கார பணிவிடையும் நடந்தது. 

இதில் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், மகாராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம், உள்பட பலர் கலந்து கொண்டனர். 

விழாவில் நன்கொடையாளர்கள் கோபுரம் கட்டிய தலைமை ஸ்தபதி ஆறுமுகம் சிற்பி மற்றும் சிற்பக் கலைஞர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 

பின்னர் மதியம் அன்னதானமும் இரவு 7 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நரிக்குளம் ஸ்ரீமன் நாராயண சாமி கோவில் நிர்வாக குழு தலைவர் பகவதீஷ்வரன், செயலாளர் வேலப்பன் பொருளாளர் மதன் மற்றும் நிர்வாக குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News