வழிபாடு
சேளூர் செல்லப்பம்பாளையம் மந்த மாரியம்மன் கோவில் திருவிழா

சேளூர் செல்லப்பம்பாளையம் மந்த மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2021-12-16 08:33 GMT   |   Update On 2021-12-16 08:33 GMT
சேளூர் செல்லப்பம்பாளையம் மந்த மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
பரமத்திவேலூர் தாலுகா சேளூர் செல்லப்பம்பாளையத்தில் உள்ள மந்த மாரியம்மன் மற்றும் மதுரைவீரன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மந்த மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 6-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தகுடங்களுடன் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 6-ந் தேதி முதல் 11-ம் தேதி வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

12-ந் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சியும், 14-ந் தேதி காலை மந்தமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. மதியம் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் காவிரி ஆற்றில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலுக்கு வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

இதில் சேளூர் செல்லப்பம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சியும், பெரிய பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மதியம் 3 மணிக்கு மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சேளூர்செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News