கோவில்கள்
யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம்

யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம்

Published On 2021-12-11 06:01 GMT   |   Update On 2021-12-11 06:01 GMT
உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. அதன் பெயர் யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம்.
இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிய பல கோலங்கள் பூண்டு அதிசயிக்கும் வண்ணம் உருவங்களை மாற்றி காட்சி தருவார். அந்த வகையில் உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. அதன் பெயர் யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம்.

முன்னொரு காலத்தில் சம்பாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களை பெற்றான்.

தன் வரத்தை கொண்டு அனைத்து தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அஷ்டதிக்கு பாலகர்களில் எமனை தவிர அனை வரையும் தோற்கடித்தான்.

எமன் தனது பலத்தால் போர் புரிந்தார். போர் தொடர்ந்து கொண்டே இருக்க எமன் தன் பலத்தை இழந்து கொண்டே வந்தார். இறுதியாக சம்பாசுரன் எமபுரியை கைப்பற்றினான். தேவர்களை அடிமைப்படுத்தினான். இதனால் எமன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். அப்போது இறைவன் தற்பொழுது கோவில் உள்ள இடத்தில் ஆழ்ந்த தியானத்தில் சிரசானத்தில் இருந்தார். ஈசனின் தியானம் கலைய வழி அறியாது எமன் நின்றார். எமனின் வேதனை அறிந்த அன்னை பார்வதி காட்சி அளித்தார்.

எமனிற்கு அசுரனை அழிக்கும் சக்தி வழங்கினார். எமனும் சம்பாசுரனை கொன்று தேவர்களின் குறையை தீர்த்தார். பின் இங்கு வந்து சிரசாசனத்தில் இருந்த இறைவனையும், குழந்தை முருகனுடன் இருந்த பார்வதியையும் பூஜித்தார். எனவே தான் இன்றும் இங்கே இறைவன் சிரசாசனத்தில் தலைகீழாய் காட்சி தருகிறார் என்கிறது தலபுராணம்.

இங்கே கருவறையில் இறைவன் தலைகீழாய் லிங்கம் இன்றி உருவமாக காட்சி தருகிறார். அதாவது சிரசை பூமியில் பதித்து பாத்தை மேலே தூக்கி நிறுத்தி சிரசாசனத்தில் காட்சி தருகிறார். அருகிலேயே அன்னை வேறு எங்கும் இல்லாத வண்ணம் குழந்தை முருகனை மடியில் கிடத்திக் கொண்டு தாய்மையே வடிவாக பார்வதி தேவி காட்சி அளிக்கிறார். எமன் பூஜித்த தலம் ஆதலால் ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனையும் அம்பிகையையும் ஒரு சேர தரிசித்து செல்ல எம பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சினைகள், திருமண தடை, குழந்தையின்மை போன்ற குறைபாடுகளை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள எனமதுரு கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
Tags:    

Similar News