செய்திகள்
பிரதமர் மோடி

இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு அதிக உதவிகளை செய்வோம்- பிரதமர் மோடி அறிவிப்பு

Published On 2021-10-11 09:27 GMT   |   Update On 2021-10-11 10:01 GMT
விண்வெளித் துறையை பொறுத்தவரையில் அனைத்து தொழில் நுட்பங்களையும் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது.

புதுடெல்லி:

விண்வெளி பணிகள் தொடர்பான சாதனங்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் இணைந்து இந்திய விண்வெளி சங்கம் என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர். இதன் தொடக்க விழா டெல்லியில் இன்று நடந்தது. பிரதமர் நரேந்திரமோடி இதில் கலந்து கொண்டு சங்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டின் விண்வெளி துறைக்கு உதவியாக இந்த அமைப்பு இருக்கிறது. தொழில்களில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்து வருகிறது. இதில் அரசு மிகுந்த உறுதிபாட்டுடன் திகழ்ந்து வருகிறது.

நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு வழங்கியதில் வெற்றியை கண்டு இருக்கிறோம். தேவையற்ற பொதுத் துறைகளை தனியார்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கையாகும்.

 


இப்போது விண்வெளி தொழில்துறையில் தனியார்கள் பங்கேற்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் நாட்டுக்கு உதவிகரமான பணிகளை அவர்கள் செய்து வருகிறார்கள்.

இந்தியா சுய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் அனைத்து பிரிவிலும் விரிவான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. விண்வெளித் துறையை பொறுத்தவரையில் அனைத்து தொழில் நுட்பங்களையும் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது.

தொழில் துறை, இளம் கண்டுபிடிப்பாளர்கள், புதிய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசு அதிக உதவிகளை செய்யும். இளம் தலைமுறையினர் இந்த துறைகளில் அதிகளவில் பங்குபெற வேண்டும். உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் திட்டம், இந்தியாவின் சுய தேவையை குறிப்பாக தொழில் நுட்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க அமெரிக்கா சம்மதம்

Tags:    

Similar News