செய்திகள்
விடிய, விடிய வெளுத்து வாங்கிய கனமழையினால் அரசு ஆஸ்பத்திரி, கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய வெளுத்து வாங்கிய கனமழை: அரசு ஆஸ்பத்திரி, கோவிலுக்குள் புகுந்த மழைநீர்

Published On 2021-11-27 13:22 GMT   |   Update On 2021-11-27 13:22 GMT
திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் விடிய, விடிய வெளுத்து வாங்கிய கனமழையினால் அரசு ஆஸ்பத்திரி, கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையினால் தாழ்வான பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. அப்போது மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். மேலும் வாகன ஓட்டிகள் குளம் போல் தேங்கி நின்ற தண்ணீரை கடந்து செல்ல சிரமப்பட்டனர். திருவாரூர் தியாகராஜர் கோவில் கிழக்குகோபுர வாசல் 2-வது பிரகாரம் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர்.

திருவாரூர் விஜயபுரம் அரசு தாய் சேய்-நல ஆஸ்பத்திரிக்குள் மழை நீர் புகுந்தது. இதில் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் ஆஸ்பத்திரி மருந்தகம், சிகிச்சை பிரிவு, படுக்கை அறை என அனைத்து பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் மகப்பேறு சிறப்பு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார்கள் அவதியடைந்தனர். தகவல் அறிந்ததும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தாய், சேய் நல ஆஸ்பத்திரிக்குள் புகுந்த மழைநீரை நேரில் பார்வையிட்டார். உதவி கலெக்டர் பாலச்சந்திரன், தாசில்தார் ஆகியோர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் நோயாளிகளை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமையில் ஊழியர்கள் பொக்்லின் எந்திரன் மூலம் ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். திருவாரூர் ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பும் தண்ணீர் தேங்கி நின்றது.

மாவட்டத்தில் பல இடங்களில் மழைநீர் வெளியேற போதிய வடிகால் வசதி இல்லாததால் தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் பல இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனர். எனவே போர்கால அடிப்படையில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News