ஆன்மிகம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சப்தாவர்ணம் நிகழ்ச்சி

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சப்தாவர்ணம் நிகழ்ச்சி

Published On 2020-12-31 07:22 GMT   |   Update On 2020-12-31 07:22 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நடந்த சப்தாவர்ணம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.

9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலையில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையொட்டி ரிஷப வாகனத்தில் தாணுமாலயசாமியும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணவரான பெருமாளும் வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தனர்.

அதன் பிறகு மருங்கூர் முருகன், கோட்டார் வலம்புரி விநாயகர், வேளிமலை குமாரசுவாமி எதிரெதிரே காட்சியளித்தனர். பிறகு அனைத்து தெய்வங்களுக்கும் ஒன்றுபோல் தீபாராதனை நடந்தது. அப்போது, தாணுமாலய சாமி ரிஷப வாகனத்தில் அமர்ந்து தனது மக்களை பிரிய மனமில்லாமல் கோவில் சன்னிதானத்தில் முன்னும் பின்னுமாக அசைந்து, அசைந்து செல்வதும், திரும்புவதுமாக பலமுறை நடந்தது. இந்த காட்சியை காண அன்று நள்ளிரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெண்கள் குலவை இட்டு, மங்கல ஒலிஎழுப்பிடவும், மேளதாளம் முழங்கவும் வாகனங்களிலிருந்து தாய், தந்தையர் கோவிலை சென்றடைந்தனர்.

இந்த காட்சியை காண வந்த பக்தர்கள் பலரும் இரவு கோவிலிலேயே தங்கி தொடர்ந்து நேற்று அதிகாலை நடந்த ஆருத்ரா தரிசனத்தை கண்டு களித்தனர். திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகம், அறங்காவலர் குழுவினர், பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.
Tags:    

Similar News