செய்திகள்

நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக முறையீடு செய்ய லண்டன் கோர்ட்டில் விஜய் மல்லையா மனு

Published On 2019-02-15 14:24 GMT   |   Update On 2019-02-15 14:24 GMT
இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய லண்டன் கோர்ட்டில் விஜய் மல்லையாவின் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. #VijayMallya #Mallyafiles #Mallyaextradition #extraditionorder
லண்டன்:

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு பிரிட்டன் நாட்டின் உள்துறை மந்திரி சாஜித் ஜாவெத் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக முறையீடு செய்ய விஜய் மல்லையாவக்கு 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்டு லண்டன் கோர்ட்டில் விஜய் மல்லையாவின் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின்படி அவர் மேல் முறையீட்டு வழக்கு தொடர்வதற்கு கோர்ட்  அனுமதி அளிக்குமா? அல்லது, அவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுமா? என்பது தொடர்பாக பரிசீலிக்கும் ‘மனுக்களுக்கான நீதிபதி’யின் (judge on papers) ஆய்வுக்காக விஜய் மல்லையாவின் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டால் தனது கோரிக்கை தொடர்பாக அவர் மீண்டும் ஒருமுறை சீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இம்மனுவின் மீது விஜய் மல்லையாவின் வழக்கறிஞரும், அரசுதரப்பு வழக்கறிஞரின் வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர் இறுதி முடிவு எட்டப்படும்.

அப்படி இல்லாமல், ஆரம்பகட்டத்திலேயே விஜய் மல்லையாவின் மனு லண்டன் ஐகோர்ட்டில் விசாரணைக்கு ஏற்கப்பட்டால், விசாரணை நீதிபதி யார்? என்பதை அறிவித்து, முதல் விசாரணைக்கான தேதி குறிப்பிடுவதற்கே சில மாதங்கள் ஆகலாம்.

பின்னர், வழக்கு நடந்து தீர்ப்பு வெளியானாலும், இருதரப்பினருமே தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #VijayMallya #Mallyafiles #Mallyaextradition #extraditionorder
Tags:    

Similar News