ஆன்மிகம்
21 அக்னிச்சட்டி எடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றிய பெண் பக்தர்.

பங்குனி பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர்

Published On 2021-04-06 06:23 GMT   |   Update On 2021-04-06 06:23 GMT
விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து பிரார்த்தனையை செலுத்தினர்.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அன்றைய தினம் பக்தர்கள் பொங்கலிட்டு தங்கள் பிரார்த்தனையை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து நேற்று அக்னி சட்டி எடுத்து பிரார்த்தனையை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலில் தங்கள் பிரார்த்தனையை செலுத்தினர்.

மேலும் பறவை காவடி, அலகு குத்தி தேர் இழுத்தல் போன்ற பிரார்த்தனையை பக்தர்கள் செலுத்தியது பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.

மேலும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அக்னி சட்டி எடுத்து சென்றது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

அனைத்து தெருக்களில் செல்லும் பக்தர்களும் கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மேலும் அக்னி சட்டி எடுக்கும் பக்தர்களும் அவருடன் செல்வோரும் மஞ்சள் ஆடை உடுத்தி சென்றதால் நகரில் அனைத்து தெருக்களும் மஞ்சள் போர்வை போர்த்தியது போன்ற ஒரு காட்சியை காண முடிந்தது.

பெண்கள் பலர் 21 அக்னி சட்டி எடுத்து வந்து தங்கள் பிரார்த்தனையை செலுத்தினார்.

கொரோனா பாதிப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கோவில் நிர்வாகமும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனாலும் பக்தர்கள் பக்தி பரவசத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க இயலாமல் போய்விட்டது. போலீசார் முடிந்தவரை பக்தர்களை நெரிசலாக செல்லாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்திய வண்ணமிருந்தனர். பங்குனி பொங்கல் விழாவையொட்டி நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து இருந்தது. தேர்தல்பணி நெருக்கடி இருந்த போதிலும் இந்த விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டனர்.
Tags:    

Similar News