குழந்தை பராமரிப்பு
அறிவியல் படிப்பும், எதிர்காலமும்..

அறிவியல் படிப்பும், எதிர்காலமும்..

Published On 2022-03-26 03:32 GMT   |   Update On 2022-03-26 03:32 GMT
அறிவியல் ஆசையை குழந்தைகளின் மனதில் விதைத்ததோடு, முறையான வழிகாட்டுதல்களை வழங்கி பல மாணவ-மாணவிகளை அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர் ராபர்ட் வில்சன்.
‘‘அறிவியல் ஆராய்ச்சியில் முன்னேறியுள்ள நாடுகளே இன்று உலக அரங்கில் வளர்ந்த நாடுகளாக உள்ளன. இதில் இருந்தே அறிவியல் படிப்புகளின் முக்கியத்துவம் புரியும்’’ என்று முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், கோவை கார்மல் கார்டன் பள்ளியை சேர்ந்த முன்னாள் அறிவியல் ஆசிரியர் ராபர்ட் வில்சன். 30 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய இவர், தமிழகம் முழுக்க பல அறிவியல் கண்காட்சிகளை நடத்தியிருக்கிறார். அதன் மூலம் அறிவியல் ஆசையை குழந்தைகளின் மனதில் விதைத்ததோடு, முறையான வழிகாட்டுதல்களை வழங்கி பல மாணவ-மாணவிகளை அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக மாற்றியிருக்கிறார். மேலும் முரண்பாடான அறிவியல் கோட்பாடுகளை, புதுமையாக விளக்கும் இவர், அதற்காக பல பிரத்யேக புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

அறிவியல் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் ராபர்ட் வில்சன், அறிவியல் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.

* அறிவியல் படிப்பின் அவசியம் என்ன?

ஒவ்வொரு நிகழ்வும், நகர்வும், உணர்வும், அளவும் அறிவியலே. உலகில் அதிகமாக பேசப்படும், கேட்கப்படும் கருத்துகளில், எது உண்மை எது பொய் என்பதை பிரித்து பார்க்க, நிரூபித்து காட்ட அறிவியல் அவசியமாகிறது. அதேபோல மூடநம்பிக்கைகளை விரட்டவும், உலகை ஆராயவும், உலகை ஆளவும் அறிவியல் அவசியமாகிறது.

* அறிவியல் படிப்பின் மூலம் எத்தகைய வேலைவாய்ப்புகளை பெற முடியும்?

மருத்துவம், அறிவியல்-ஆராய்ச்சிகளில் வேலைவாய்ப்புகள் பெறலாம். அதோடு உயர் கல்வி, சுகாதாரம், சுற்றுப்புற சூழல், காவல் துறை, எந்திரவியல், பாலிமர் தொழில்நுட்பம், விவசாயம், அணு பிளவு, கதிர்வீச்சு, நானோ துறை, விண்வெளி துறை, பாதுகாப்பு துறை... இப்படி அறிவியல் கலந்திருக்கும் பல நவீன துறைகளிலும் அறிவியலின் மூலம் வேலைவாய்ப்பு பெறலாம். தொடக்க நிலை முதல், உயர் பதவி வகிப்பது வரை அறிவியல் படிப்புகள் துணை நிற்கின்றன.

* அறிவியலை மையப்படுத்தி உயர் கல்வியில் என்னென்ன படிக்கலாம்?

பி.எஸ்சி. படிப்பில் நவீன விலங்கியல், மேம்படுத்தப்பட்ட விலங்கியல் மற்றும் விலங்கு உயிரி தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி, தாவரவியல், விலங்கியல், உயிரியல், இயற்பியல் படிக்கலாம். உயர்கல்வியை பொருத்தமட்டில், மருத்துவ உயிரி வேதியியல், மருத்துவ நுண்ணுயிரியல், உணவுத் தொழில்நுட்பம், பொது சுகாதாரம் மற்றும் பூச்சியியல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் சயின்ஸ் படிப்புகளை படிக்கலாம்.

* அறிவியலில் சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும்?

புத்தக அளவில் இருக்கும் அறிவியல் கோட்பாடுகளை, செய்முறை விளக்கங்களாக செய்து பார்க்கலாம். யூ-டியூப் தளங்களில் இருக்கும் வேதியியல் செய்முறைகளை, பார்த்து புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தனிமங்களின் பண்பு நலன்கள், கூட்டு சேர்க்கைகளின் விளைவுகளை உணர்ந்து, புரிந்து பயன் பெறலாம். புதிய ஆராய்ச்சிகளை முன்னெடுக்கலாம். ரசிக்கலாம்.

* அறிவியல் படிப்பிற்கு ஏற்ற வேலைவாய்ப்பு இருக்கிறதா?

இருக்கிறது. அறிவியல் படிப்பிற்கு அறிவியல் துறையில் மட்டும்தான் வேலை இருக்கிறது என்ற எண்ணம் தவறானது. ஏனெனில் அறிவியல் படிப்பிற்கு பல துறைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஏரோநாட்டிக்கல் சயின்ஸ், குற்ற புலனாய்வுத்துறை, தீயணைப்பு துறை, கப்பல் மேலாண்மை துறை, வேளாண்துறை, நீர்வளத்துறை, விண்வெளி துறை... இப்படி அறிவியல் கலந்திருக்கும் மற்ற துறைகளிலும் வேலைவாய்ப்புகள் இருக்கிறது.

* அறிவியல் துறை மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு இருக்கிறதா? எப்படி ஊக்கப்படுத்துவது?

இருக்கிறது. ஆனால் அவர்களின் ஆசையை, ஆசிரியர்கள்தான் ஆவலாக தூண்டி விட வேண்டும். அதோடு மட்டுமில்லாமல், சரியான பாதையில் வழிநடத்தி, உற்சாகமான அறிவியல் ஆராய்ச்சிகளில் அவர்களை ஈடுபடுத்தி, அறிவியல் துறையிலேயே வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதலையும் செய்து கொடுக்க வேண்டும்.

ராபர்ட் வில்சன்
Tags:    

Similar News