செய்திகள்
சாலையோர புல்வெளியில் புள்ளிமான் கூட்டம் முகாமிட்டு இருந்ததை காணலாம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கியது

Published On 2021-11-25 04:10 GMT   |   Update On 2021-11-25 04:10 GMT
முதுமலை உள்வட்ட பகுதிகளான தெப்பக்காடு, நெலாக்கோட்டை, கார்குடி உள்ளிட்ட பகுதிகளில் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி உள்பட எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனத்துறையினர் அவ்வப்போது வனவிலங்குகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தாவர மற்றும் மாமிச உண்ணி வனவிலங்குகளின் கணக்கெடுப்பு மற்றும் வாழ்விட மதிப்பீட்டுப் பணி இன்று தொடங்கியது. இந்த பணியில் வனசரகர்கள், வன காவலர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலரும் ஈடுபட்டனர்.

முதுமலை உள்வட்ட பகுதிகளான தெப்பக்காடு, நெலாக்கோட்டை, கார்குடி உள்ளிட்ட பகுதிகளில் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் நேரடி காட்சிகள், கால்தடங்கள், விலங்குகளின் எச்சங்கள், நகக்கீறல்கள், தாவர மற்றும் மாமிச உண்ணிகள், ஊர்வன, பறப்பன உள்ளிட்டவைகளின் தடயங்களை சேகரித்து வருகிறார்கள்.

சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தெப்பக்காட்டில் உள்ள கண்காணிப்பு மையத்தில் வைக்கப்பட உள்ளது. இன்று தொடங்கியுள்ள கணக்கெடுப்பு பணி வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

உள்வட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணி முடிந்ததும் வருகிற 1-ந் தேதி முதல் முதுமலை வெளிவட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

முன்னதாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபடக்கூடிய வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கணக்கெடுத்தல் பணியின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், தடயங்கள் சேகரித்தல் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News