செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க 9 காரணங்கள் - தேர்தல் கமி‌ஷன் விளக்கம்

Published On 2019-01-07 05:48 GMT   |   Update On 2019-01-07 06:39 GMT
ஜனவரி 28ந் தேதி நடப்பதாக இருந்த திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக விரிவான விபரங்கள் வெளியாகியுள்ளது. #ThiruvarurByElection #ElectionCommission

சென்னை:

கருணாநிதி மரணம் காரணமாக 7-8-2018 முதல் திருவாரூர் சட்டசபை தொகுதி காலி இடமாக உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி காலியாக உள்ள தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் அதாவது 6-2-2019க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஜனவரி 3-ந்தேதி அறிவிக்கை வெளியிட்டது. 28-ந்தேதி ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு ஏற்ப தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடந்த 3-12-2018 அன்று தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடும் பேரிழவு ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். விவசாய பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் அழிந்ததோடு 6 லட்சம் வீடுகள், 1½ லட்சம் மின் கம்பங்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

கஜா புயல் பாதித்த 12 மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று என்றும், அங்கு நிவாரணப் பணிகள் முடிந்து முழுமையான இயல்பு நிலை திரும்ப குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என்றும் கூறி இருந்தார். எனவே திருவாரூர் தொகுதிக்கு 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.

மேலும் தலைமைச் செயலாளர் தனது கடிதத்தில், காலி இடமாக உள்ள மேலும் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். தமிழக அரசு தலைமை செயலாளரின் இந்த கடிதத்தை மத்திய உள்துறைக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி கருத்து கேட்டது.

அதை ஏற்று கடந்த 31-12-2018 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்து இருந்தது. அதில், “தமிழ்நாட்டில் நவம்பர் 15-ந்தேதி தாக்கிய கஜா புயலில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளில் மாநில அரசு மூலம் நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2-1-2019 அன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு இ.மெயில் மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். மறுநாள் 3-1-2019 அன்று அவர் தேர்தல் கமி‌ஷனரை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தார்.

மேலும் கஜா புயல் தாக்குதல் காரணமாக மாநில அரசு அதிகாரிகள் அனைவரும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தற்காலிகமாக மற்றொரு மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். இதுபற்றி தலைமை தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டது. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யலாம் என்று கூறி இருந்தார்.

 


இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருவாரூரில் தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை உள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரி திருவாரூரில் கடந்த 5-1-2019 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து கருத்து கேட்டார்.

பா.ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகியவை உள்பட பல்வேறு கட்சிகள் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டன. கஜா புயல் நிவாரப்பணிகள் நடந்து வருவதால் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று இந்த கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்தன.

இது தொடர்பாக கடந்த 6-1-2019 அன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமான அறிக்கை ஒன்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருந்தார். அதில் கூறி இருந்ததாவது:-

1. கஜா புயலால் இடம் பெயர்ந்துள்ள பட்டியலை தயாரிக்க மாநில நிர்வாகத்துக்கு கூடுதல் அவகாசம்.

2. கஜா புயல் நிவாரணப் பணிகள் பாதிதான் முடிந்து உள்ளன. முழுமையாக முடிக்க அவகாசம் வேண்டும். நிவாரணப் பணிகளில் உள்ள அதிகாரிகள்தான் தேர்தல் பணிகளை செய்ய வேண்டி உள்ளது.

3. தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாள் தேர்தல் சமயத்தில் வருகிறது.

4. டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட வேண்டி உள்ளது. அந்த சமயத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீற வாய்ப்பு உள்ளது.

5. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

6. இந்த சூழ்நிலையில் வியாபாரிகளும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதை விரும்பவில்லை.

7. தமிழ்நாட்டில் பள்ளிகளில் பொதுத்தேர்தவு 2 வாரங்களில் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் ஆசிரியர்களை தேர்தல் அதிகாரிகளாக பணியாற்ற வைப்பதில் இடையூறு உள்ளது.

8. இத்தகைய சூழ்நிலையில் பொதுமக்கள் தேர்தல் நடைமுறைகளில் ஆர்வமுடன் தீவிரமாக பங்கேற்கமாட்டார்கள்.

9. மேலும் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்டபோது அனைத்து கட்சிகளும் தேர்தலை நடத்த வேண்டாம் என்றும் ஒத்திவைக்க கோரியும் கருத்து தெரிவித்து உள்ளன.

இவ்வாறு தமிழக தேர்தல் அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் செய்ய வேண்டி இருப்பதை மாவட்ட கலெக் டர் மூலம் தெரிய வந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு தற்போது திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை சுமூகமாக நடத்த முடியாது என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்தது.

எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் -1951 பிரிவு 150, 30, 56 மற்றும் அரசியல் சட்டப்பிரிவு 326, பொது காரணங்கள் சட்டப்பிரிவு 21 ஆகியவற்றின் அடிப்படையில் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. இதன் விளைவாக திருவாரூர் தொகுதி மாவட்ட தேர்தல் அதிகாரி இதுவரை மேற்கொண்டு இருந்த தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும், நடவடிக்கைகளும் செல்லாது என்று அறிவிக்கப்படுகிறது.

தமிழக அரசின் கடிதம் மற்றும் கட்சிகளின் கருத்து அடிப்படையில் திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து ஆகிறது. திருவாரூர் தொகுதியில் சுமூகமாக, நியாயமாக, அமைதியாக தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை உருவான பிறகு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர்களின் உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags:    

Similar News