செய்திகள்
கோப்புபடம்

மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்-ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்

Published On 2021-10-29 08:04 GMT   |   Update On 2021-10-29 08:04 GMT
வரும்1-ந்தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளதால் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உடுமலை:

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக மக்கள் பலரும் பொருளாதார ரீதியாக அதிக அளவு பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர்  குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளனர்.

அவ்வகையில் வழக்கத்துக்கு மாறாக உடுமலை கணக்கம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில்  300 பேர், சின்னவீரன்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் 200 பேர், சிவசக்திகாலனி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 70 பேர், யு.கே.பி., நகராட்சி தொடக்கப்பள்ளியில்  50 பேர் என மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

வரும் 1-ந்தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளதால் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதுமான அளவில் கட்டடங்கள் உள்ளதால் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் பிரிட்டோ மற்றும் சரவணன் கூறியதாவது:-

மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள பள்ளிகளில் போதுமான அளவில் கட்டிட வசதி உள்ளது. கணக்கம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மட்டுமே  கூடுதல் கட்டிடம் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கு நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. தவிர  மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வகுப்பறைகள் குறைவாக உள்ள பள்ளிகளில்  சுழற்சி முறையில் பாட வகுப்புகள் நடத்தப்படும்.மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

இதனிடையே பள்ளியில் மாணவர்களுக்கு பாடங்களை எளிமையாக நடத்த தேவையான காணொலி  பதிவுசெய்யும் பணி நடைபெற்றது. உடுமலையை அடுத்து திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவனத்தின் சார்பில் தொடக்கப்பள்ளி, நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடங்களை எளிதாக நடத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன்படி 3-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் குறைந்தது 10 கடினப்பகுதிகளை அடையாளம் கண்டு மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் காணொலிகளாக தயாரிக்கும் பணிக்கான பயிற்சி வகுப்பு இதுவாகும்.

இந்த பணியில் 3-ம் வகுப்புக்கு 10 ஆசிரியர்கள், 10-ம் வகுப்புக்கு 10 ஆசிரியர்கள் என மொத்தம் 20 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் செயல்பாடுகள் மூலம் கற்றல் விளைவுகளை எளிமையாக மாணவர்களிடம் அடையச்செய்யும் விதமாக காணொலிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி வகுப்பில் காணொலிகளுக்கு உடுமலை அரசு கலைக்கல்லூரி, வித்யாசாகர் கலைமற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர்கல்லூரி ஆகிய கல்லூரிகளின் பேராசிரியர்கள் 10 பேர் அறிமுகவுரையை வழங்கினர்.

மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சங்கர் தலைமை தாங்கினார். முதுநிலை விரிவுரையாளர்கள் சரவணக்குமார், பாபி இந்திரா, தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் ஆகியோர் பேசினர். முடிவில் முதுநிலை விரிவுரையாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.
Tags:    

Similar News