ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது

Published On 2020-10-17 07:43 GMT   |   Update On 2020-10-17 07:43 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. விழா வருகிற 25-ந் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களுக்கு நடக்கிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்று. இந்த விழா 9 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். விழா நாட்களில் பராசக்தி அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. விழா வருகிற 25-ந் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களுக்கு நடக்கிறது.

விழாவை முன்னிட்டு இன்று மாலை பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து வாணவேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருகிறார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கெஜலட்சுமி அலங்காரத்திலும், 20-ந் தேதி மனோன்மணி அலங்காரத்திலும், 21-ந் தேதி ரிஷப வாகனத்திலும் பராசக்தி அம்மன் எழுந்தருளுவார்.

22-ந் தேதி ஆண்டாள் அலங்காரத்திலும், 23-ந் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும், 24-ந் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரத்திலும், 25-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளுகிறார். அன்று மாலை உண்ணாமலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு தீபாரதனை நடைபெறும். விழாவின் நிறைவாக விஜயதசமி அன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கும், பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நவராத்திரி விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கம்போல சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அப்போது நவராத்திரி விழா நடைபெறும் திருக்கல்யாண மண்டபத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த தகவலை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News