செய்திகள்
மெட்ரோ ரெயில்

கட்டண குறைப்புக்குப்பின் மெட்ரோ ரெயிலில் 86 ஆயிரம் பேர் பயணம்

Published On 2021-02-23 06:32 GMT   |   Update On 2021-02-23 06:32 GMT
மெட்ரோ ரெயிலில் சாமானிய மக்களும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக கட்டண குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் 86,102 பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னை:

சென்னை மெட்ரோ ரெயிலில் நேற்று முதல் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகளவு மெட்ரோ ரெயிலை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிவித்துள்ளார்.

அதன்படி அதிகபட்சமாக 20 ரூபாய் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இது மெட்ரோ ரெயிலை பயன்படுத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் விமானப் பயணம் மேற்கொள்வோருக்கு உதவியாக அமைந்துள்ளது.

இது தவிர சாமானிய மக்களும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக கட்டண குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் 86,102 பேர் பயணம் செய்துள்ளனர்.

கடந்த 14-ந்தேதி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு சேவை தொடங்கியதை தொடர்ந்து மறுநாள் 15-ந்தேதி 80 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். அதன் பிறகு நேற்றுதான் அதிகம் பேர் பயணம் செய்துள்ளனர். வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் இடையே மட்டும் 11,519 பேர் நேற்று பயணம் செய்துள்ளனர்.

மெட்ரோ ரெயில் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் 39 மெட்ரோ ரெயில் நிலையங்களில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக ‘நாப்கின்’ வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.

இதற்கான எந்திரம் நிறுவப்பட்டு அதில் டோக்கன் முலம் பெண்கள் கட்டணம் இல்லாமல் நாப்கின் பெறும் வசதியை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைக்கிறார்.
Tags:    

Similar News