உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உரிய ஆவணங்கள் இல்லாமல் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - அதிகாரி எச்சரிக்கை

Published On 2022-01-13 04:45 GMT   |   Update On 2022-01-13 04:45 GMT
வாட்ஸ் ஆப் மற்றும் பிற இணைய தளத்தின் வாயிலாக, விற்பனை செய்யும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம்.
உடுமலை:

உரிய ஆவணங்கள் இல்லாமல் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாச்சலம் கூறியதாவது:

விவசாயத்திற்கு விதைகளே ஆதாரமாக இருப்பதால் விவசாயிகள் விதைகளை கொள்முதல் செய்யும் போது அரசு உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.

மேலும் விதைகளின் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் மற்றும் பருவம் ஆகியவற்றை கவனித்து கையொப்பமிட்டு வாங்கியபின் அந்த ரசீதினை சாகுபடி காலம் முடியும் வரை பத்திரமாக வைக்க வேண்டும். உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களும் விதை கொள்முதல் செய்யும் போது தேர்ச்சி பெற்ற விதை முளைப்புத்திறன் அறிக்கையுடன் தான் வாங்க வேண்டும்.

பதிவு எண், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விதை விற்பனை செய்யக்கூடாது. உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்தாலோ அல்லது போலி விற்பனை பட்டியல் வழங்கியிருந்தாலோ சம்பந்தப்பட்ட விதை விற்பனை நிறுவனத்தின் மீது விதைச்சட்டத்தின் கீழ் விற்பனை நிலையத்திற்கு தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு தனியார் விதை உற்பத்தியாளர்களும் தங்களின் விதை ரகங்களுக்கு விதைச்சான்று இயக்குனர் அலுவலகத்தில் பதிவு எண் பெற்றிருக்க வேண்டும்.

விதைச்சான்றுத்துறை உரிமம் பெறாமலும், விற்பனை பட்டியலும் இல்லாமல் விதை விவர அட்டை மற்றும் விதை சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் நேரடியாகவோ, வாட்ஸ்ஆப் மற்றும் பிற இணைய தளத்தின் வாயிலாக, விற்பனை செய்யும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News