செய்திகள்
நெல்லூர்பேட்டை பெரிய ஏரி நிரம்பி வழிவதை காணலாம்

வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான நெல்லூர்பேட்டை ஏரி நிரம்பியது

Published On 2021-10-15 03:18 GMT   |   Update On 2021-10-15 03:18 GMT
வேலூர் மாவட்டத்தின் பெரிய ஏரியான நெல்லூர்பேட்டை ஏரி நிரம்பி வழிவதால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை நிரம்பி வழிவதால் அந்த அணையின் தண்ணீர் கவுண்டன்ய மகாநதி ஆற்றிலும், வலது மற்றும் இடது புற கால்வாய்களிலும் திறந்து விடப்பட்டதால் குடியாத்தம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரிகள் விரைவாக நிரம்பி வருகிறது. வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் 101 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது.

கடந்த ஆண்டு பெய்த பெரு மழையால் டிசம்பர் மாதம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி நிரம்பியது. தற்போது மோர்தானா அணை நிரம்பி வழியும் தண்ணீரால் கடந்த சில தினங்களாக நெல்லூர்பேட்டை ஏரிக்கு தண்ணீர் வரத்து இருந்தது. நேற்று காலையில் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி நிரம்பி போனது.

ஏரி நிரம்பிய தகவல் அறிந்ததும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்களும், குடியாத்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர்களும் ஏராளமானோர் ஏரி நிரம்பி வழிவதை சென்று பார்த்து வந்தனர். பொதுமக்கள் சிலர் பூஜை செய்து ஏரிநீர் வழிந்ததை வரவேற்றனர்.

குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில் தாமஸ், நீர்வள ஆதார துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு தண்ணீர் வருவதை கண்காணித்து வருகின்றனர். ஏரி நிரம்பி வழிவதால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News