செய்திகள்
ஜித்தன் ராம் மஞ்சி

பீகாரில் ஜித்தன் ராம் மஞ்சியின் கட்சி பாஜக கூட்டணியில் இணைகிறது

Published On 2020-09-02 06:44 GMT   |   Update On 2020-09-02 06:44 GMT
பீகார் மாநிலத்தில் ஜித்தன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைய உள்ளது.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியும் இடம்பெற்றிருந்தது. தற்போது கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஜித்தன் ராம் மஞ்சி அந்த கூட்டணியில் இருந்து கடந்த மாதம் 20ம் தேதி விலகினார்.

இதனையடுத்து அவர் தனது கட்சியை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைக்கலாம் என்று தகவல் வெளியானது. கடந்த வாரம் நிதிஷ் குமாரை சந்தித்து பேசினார். இதேபோல் மூன்றாவது அணியை அமைக்கலாம் என்றும் பேசப்பட்டது. இதற்காக பப்பு யாதவ், முகேஷ் சகானிலெட் உள்ளிட்ட தலைவர்களுடன் பேசி வந்தார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், ஜித்தன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி, பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் நாளை இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சிக்கு 9 முதல் 12 சீட்கள் கிடைக்கலாம் என கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தலித் வாக்குகளை மஞ்சியின்மூலம் பெறலாம் என பாஜக மூத்த தலைவர்கள் கணித்துள்ளனர்.

243 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் மொத்தம் 7.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 15 சதவீதம் தலித் மற்றும் மகாதலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். 17 சதவீதம் முஸ்லிம், 50 சதவீதம் ஒபிசி, 19 சதவீதம் உயர் வகுப்பினர், 2 சதவீதம் ஆதிவாசி மக்கள் ஆவர். என்டிஏ கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, எல்ஜேபி ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியில் ராம் விலாஸ் பஸ்வான் போன்ற பிற தலித் மற்றும் மகாதலித் தலைவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News